/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான சூணாம்பேடு சாலை சீரமைக்க வலியுறுத்தல்
/
சேதமான சூணாம்பேடு சாலை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : மே 05, 2025 01:26 AM

சூணாம்பேடு:சூணாம்பேடு பகுதியில் மதுராந்தகம்-வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலை உள்ளது. சாலையில் தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக இரண்டு மாதங்களாக சூணாம்பேடு ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு, பாலம் அமைக்கப்படும் இடங்கள் மற்றும் தாழ்வாக உள்ள பகுதிகளில் கொட்டப்பட்டு வருகிறது.
ஏரியில் இருந்து லாரிகள் மூலமாக அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தொடர்ந்து லாரிகள் செல்வதால், பல்வேறு இடத்தில் பள்ளங்கள் ஏற்பட்டு சாலை சேதமடைந்து வருகிறது.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர்.
ஆகையால் மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளும் நிறுவனத்தின் வாயிலாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
lசிங்கபெருமாள் கோவில் --- அனுமந்தபுரம் சாலை 9 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையை பயன்படுத்தி 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் -- தென்மேல்பாக்கம் இடையே 500 மீ., துாரம் சாலை குறுகலாகவும், சமதளமற்றும் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த சாலை பல இடங்களில் குண்டும், குழியுமாக சிதிலமடைந்து உள்ளது. இந்த சாலையில் உள்ள பள்ளங்கள் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.