ரூ.130 கோடியில் கட்டிய புதிய பேருந்து நிலையம் காத்திருப்பு! 6 மாதங்களாக திறக்கப்படாததால் நெரிசல் அதிகரிப்பு
ரூ.130 கோடியில் கட்டிய புதிய பேருந்து நிலையம் காத்திருப்பு! 6 மாதங்களாக திறக்கப்படாததால் நெரிசல் அதிகரிப்பு
UPDATED : செப் 23, 2026 10:30 PM
ADDED : செப் 23, 2026 08:43 PM

செங்கல்பட்டு: மலையடிவேண்பாக்கத்தில், 130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டடப்பட்ட செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம், கட்டி முடித்து ஆறு மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருப்பதால், செங்கல்பட்டு நகரில் வாகன நெரிசல் அதிகரித்து வருகிறது. முதல்வர் விஜய் விரைந்து நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும் என, பயணியர் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
செங்கல்பட்டு நகரில், பழைய பேருந்து நிலையம் முதல் ராட்டிணங்கிணறு வரை, விழா காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெரிசலை தவிர்க்க, புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை நகருக்கு வெளியே அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
அதை தொடர்ந்து, ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சொந்தமான 9.95 ஏக்கரில், புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்தது.
இப்பணிகளை, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமமான சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டது. செங்கல்பட்டு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, தனியார் ஒப்பந்ததாருக்கு 'டெண்டர்' விடப்பட்டது.
அதன்பின், புறநகர் பேருந்து நிலைய பணிகளுக்கு, அப்போதைய முதல்வர் ஸ்டாலின், 2023, நவ., 15ல் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் அடிக்கல் நாட்டினார்.
இதை தொடர்ந்து, பேருந்து நிலையம், போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட பணிகளும், கடந்தாண்டு மார்ச் மாதம் நிறைவடைந்தது. சட்டசபை தேர்தலால், திறப்பு விழா தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது த.வெ.க., ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்வர் விஜய் திறந்துவைப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால், ஆறு மாதங்களாக, புதிய பேருந்து நிலையம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார், கடந்த ஜூன் 24ல், புறநகர் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார்.
அப்போது, ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்தார். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புறநகர் பேருந்து நிலையத்தை திறக்க, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. பேருந்து நிலைய பணிகள் முடிந்து, ஆறு மாதமாக திறக்கப்படாமல் உள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.தணிகாசலம் சமூக ஆர்வலர், செங்கல்பட்டு
