ADDED : செப் 09, 2026 09:23 PM
ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பை கொட்டுவதால் மக்கள்... கோர்ட் உத்தரவை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் அதிருப்தி முடிச்சூர் ஏரியை காக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
வண்டலுார்: வண்டலுார் -– முடிச்சூர் இடையிலான 112 ஏக்கர் பரப்புள்ள ஏரியின் கரை ஓரத்தில், மேய்க்கால் நிலத்தில், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்பட்டு, புதிய குப்பை கிடங்கை உருவாக்கும் முயற்சி நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்தேறி வரும் இந்த அட்டூழிய செயலால், ஏரியின் இயல்பு தன்மை கெட்டு, அதில் கழிவு நீர் கலந்து, நிலத்தடி நீர் மாசுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஏரியை பாதுகாக்க, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்டலுார் ஊராட்சியில், 112 ஏக்கர் பரப்பளவில் முடிச்சூர் ஏரி உள்ளது.
இந்த ஏரியின் கிழக்கில் பெருங்களத்துார், மேற்கில் வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, தெற்கில் வண்டலுார், வடக்கில் முடிச்சூர் ஆகியவை எல்லையாக உள்ளன. தவிர, 100 மீ., தொலைவில் மண்ணிவாக்கம் ஊராட்சியும் உள்ளது.
வண்டலுார், மண்ணிவாக்கம், முடிச்சூர், பெருங்களத்துார் பகுதி மக்களின் நிலத்தடி நீராதாரமாகவும் இந்த ஏரி உள்ளது.
180 ஏக்கர் பரப்பில் இருந்த முடிச்சூர் ஏரி ஆக்கிரமிப்புகளில் சிக்கி தற்போது, 112 ஏக்கராக சுருங்கியது.
தவிர, ஏரியின் கிழக்கு கரையோரம் 25 ஏக்கர் பரப்பில் இருந்த மேய்க்கால் புறம்போக்கு நிலமும் ஆக்கிரமிப்புகளில் சிக்கியதால், தற்போது 10 ஏக்கராக உள்ளது.
இந்த ஏரியின் கரையோர பகுதியில் உள்ள மேய்க்கால் நிலத்தை, குப்பை கிடங்காக மாற்றும் அடாவடி பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் வண்டலுார் ஊராட்சி அதிகாரிகளால் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த இடம் முழுதும் குப்பை கழிவுகளை சேமிக்கும் ‘மினி’ கிடங்காக மாறியுள்ளது.
இந்த குப்பை கிடங்கால் வண்டலுார், மண்ணிவாக்கம், முடிச்சூர் மற்றும் பெருங்களத்துார் பகுதி மக்கள் சுகதார சீர்கேடால் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் நேரடியாக ஆய்வு செய்து, முடிச்சூர் ஏரி கரையோரம் உருவாக்கப்பட்டு வரும் குப்பை கிடங்கிற்கு தடை விதிக்க வேண்டும் என, வண்டலுார் பகுதி மக்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
இதுகுறித்து வண்டலுார் பகுதி மக்கள் கூறியதாவது:
முடிச்சூர் ஏரியின் கிழக்கு பகுதியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 2015ம் ஆண்டு முதல் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
இதை எதிர்த்து, அதிகாரிகளிடம் முறையிட்டபோது, தற்காலிக நடவடிக்கையாக சில நாட்கள் மட்டும் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடரப்பட்டது.
இதனால், அடுத்த சில ஆண்டுகளில், மேய்க்கால் நிலத்தில் பல நுாறு டன் குப்பை சேர்ந்து, குப்பை மேடாக மாறியது.
இதுகுறித்து கடந்த 2020ல், நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதனை ஆதாரமாக வைத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து 2022, மார்ச், 25ல், ஒரு தீர்ப்பை வழங்கியது.
அந்த தீர்ப்பில், ‘முடிச்சூர் ஏரி பாதுகாக்கப்பட வேண்டும்; ஏரி கரையோரம் குப்பை கொட்டுவதை அதிகாரிகள் தடை செய்ய வேண்டும்’ என, கூறப்பட்டது.
ஆனால், கோர்ட் உத்தரவை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. முடிச்சூர் ஊராட்சியிலிருந்து தொடர்ந்து குப்பை கொட்டப்பட்டு வருகிறது.
இரவு நேரத்தில் இந்த குப்பையை தீ வைத்து எரிப்பதால், வண்டலுார் முழுதும் புகை மண்டலம் பரவி, மக்கள் சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வருகினறனர்.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக குப்பை கொட்டப்படுவதால், ஏரி கரை நிலத்தில், 20 ஆடி ஆழத்திற்கு குப்பை புகுந்துள்ளது.
இந்த குப்பை கழிவால், சுற்றுப்புற பகுதி முழுதும் கொசுத் தொல்லை, துர்நாற்றம் வீசி, குடியிருப்பு மக்கள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றனர்.
தவிர, உயிரிழந்த நாய், பன்றி, பூனை, எலி உள்ளிட்ட உயிரினங்களின் உடல்களும் இந்த குப்பையில் கலந்து, அழுகி, துர்நாற்றம் வீசுகிறது.
கோர்ட் உத்தரவையும், பொது மக்கள் எதிர்ப்பையும் மீறி, இயற்கை வளத்தை பாதுகாக்க தவறும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, இந்த ஏரியை பாதுகாத்திட போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
