/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் திருமண மண்டபங்கள், அச்சகங்களுக்கு...கிடுக்கிப்பிடி!:நோட்டீஸ் அச்சடிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவு
/
செங்கையில் திருமண மண்டபங்கள், அச்சகங்களுக்கு...கிடுக்கிப்பிடி!:நோட்டீஸ் அச்சடிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவு
செங்கையில் திருமண மண்டபங்கள், அச்சகங்களுக்கு...கிடுக்கிப்பிடி!:நோட்டீஸ் அச்சடிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவு
செங்கையில் திருமண மண்டபங்கள், அச்சகங்களுக்கு...கிடுக்கிப்பிடி!:நோட்டீஸ் அச்சடிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உத்தரவு
ADDED : மார் 20, 2024 11:59 PM

செங்கல்பட்டு:திருமண மண்டபங்களில் லோக்சபா தேர்தல் தொடர்பாக, நோட்டீஸ், போஸ்டர்கள் அச்சடிக்கும் அச்சகங்கள், அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்தப்படும் மண்டப உரிமையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், திருமண மண்டபம், அடகு கடை, வணிக நிறுவனங்கள், அச்சகம் ஆகியவற்றின் உரிமையாளர்களுடனான தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, தாசில்தார் சிவசங்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருமண மண்டபங்களில், தேர்தல் தொடர்பாக அரசியல் கூட்டங்கள் நடந்தால், மாவட்ட தேர்தல் அலுவலகம், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் பார்வையாளர்கள் சோதனை நடத்தும்போது, தகவல் தெரிவிக்காமல் கூட்டம் நடத்துவது கண்டறியப்படால், தேர்தல் விதிமுறைகளின்படி, மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
நகை கடைகளில் அடகு வைத்த நகைளை, ஒருவரே மொத்தமாக மீட்டால், உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
அரசியல் கட்சியினர் அச்சகங்களில் நோட்டீஸ் அடிக்கும் போது, அச்சகங்களின் பெயர்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். அச்சகங்கள் பெயர் இல்லாமல் நோட்டீஸ் அடித்து வினியோகிப்பது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனை கூட்டத்தில், தங்கும் விடுதி, உணவகம் மற்றும் கூட்ட அரங்க உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் வகுத்தளிக்கப்பட்டன.
திருமண மண்டபம், தங்கும் விடுதி மற்றும் கூட்ட அரங்க உரிமையாளர்கள், வெளியூரிலிருந்து கூட்டமாக வந்து தங்குவதற்கு அனுமதி வழங்கக்கூடாது.
சுப நிகழ்வுகள் என்ற பெயரில், மக்களைக் கூட்டி, பரிசுப்பொருட்கள் வழங்குவது, புடவை, வேட்டிகள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது தெரியவந்தால், உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
சுப நிகழ்ச்சிகள் என்ற பெயரில், மக்களைக் கூட்டி, உணவு பொட்டலங்கள் மற்றும் சாப்பாடு பந்தி பரிமாறுதல் போன்றவை நடைபெறக்கூடாது.
திருமணம் மற்றும் சுப நிகழ்வுகள் நடைபெறும்போது, அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்கள் மற்றும் உருவங்கள் பொறித்த தட்டிகள், கட் - அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றை வைத்து, ஓட்டு சேகரிக்க முயற்சிக்கக் கூடாது.
தங்கும் விடுதி உரிமையாளர்கள், தேர்தல் நடைபெறும் காலங்களில், தங்க வருவோரின் அடையாள அட்டைகளை சரிபார்க்க வேண்டும். ஆதார் அல்லது புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல் பெற்ற பின்பே தங்க அனுமதிக்க வேண்டும். ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஆயுதங்களையோ, பட்டாசு பொருட்களையோ வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது.
அதேபோல், நகை அடகுத் தொழில் புரிவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தெரிவிக்கப்பட்டன.
அடகு வைக்கப்பட்டுள்ள நகைகள், வேட்பாளர்கள், முகவர்களால், மொத்தமாக நகை அடகு நகைகளை திருப்ப எவரேனும் முற்படின் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வந்தால், மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்; 1800 425 70888 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
ஒரே நபர், ஒன்றுக்கு மேற்பட்ட முறை, தங்களது நிறுவனத்தை அணுகி, வெவ்வேறு அடகு நகைளை திருப்ப முற்பட்டால், உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.
அச்சக உரிமையாளர்களுக்கான நெறிமுறைகள்:
அச்சகங்களின் உரிமையாளர்கள், அச்சகத்தில் அடிக்கப்படும் தேர்தல் சம்பந்தமான நோட்டீஸ், சுவரொட்டிகள், துண்டு பிரசுங்கள், செய்தி அறிக்கைகள் ஆகியவற்றில், அச்சிடுபவர் மற்றும் வெளியிடுபவர் பெயர், முகவரி முகப்பு பகுதியில் கட்டாயம் இடம்பெற வேண்டும்.
எவ்வளவு படிகள் அச்சடிக்கப்பட்டன என்ற விபரமும், தெளிவாக தெரியும் வகையில், முன் பக்கத்தில் அச்சடிக்கப்பட வேண்டும்.
தேர்தல் சம்பந்தமாக அச்சடிக்கப்பட்ட பிரதிகளில், 10 பிரதிகள், மற்றும் பிரசுரம் செய்பவரின் உறுதிமொழி ஆகியவற்றை, மூன்று நாட்களுக்குள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, தேர்தலோடு தொடர்புடைய தொழில் புரிவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்தளிக்கப்பட்டன.
இறுதியில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தேர்தலில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வை, கலெக்டர் அருண்ராஜ் துவக்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான கட்டுப்பாட்டு அறையை, கலெக்டர் ஆய்வு செய்தார்.

