/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சதுப்பு நிலத்தை ஒட்டிய 16 வருவாய் கிராமங்களில்... குழப்பம் தீருமா? எல்லை வரையறையை முடிந்தால்தான் சிக்கல் தீரும்
/
சதுப்பு நிலத்தை ஒட்டிய 16 வருவாய் கிராமங்களில்... குழப்பம் தீருமா? எல்லை வரையறையை முடிந்தால்தான் சிக்கல் தீரும்
சதுப்பு நிலத்தை ஒட்டிய 16 வருவாய் கிராமங்களில்... குழப்பம் தீருமா? எல்லை வரையறையை முடிந்தால்தான் சிக்கல் தீரும்
சதுப்பு நிலத்தை ஒட்டிய 16 வருவாய் கிராமங்களில்... குழப்பம் தீருமா? எல்லை வரையறையை முடிந்தால்தான் சிக்கல் தீரும்
ADDED : நவ 12, 2025 10:02 PM

சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலம், அதையொட்டி பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளதால், சோழிங்கநல்லுார், பெருங்குடி, வேளச்சேரி மண்டலங்கள் மற்றும் ஊராட்சிகளின் 16 வருவாய் கிராமங்களில் உள்ளோர், கட்டுமான பணியை தொடர்வதா, கைவிடுவதா; கட்டுமான அனுமதி கிடைக்குமா என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். 'ராம்சார்' எல்லை வரையறை முடிந்தால் மட்டுமே, இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்.
சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், விதிகளை மீறி தனியார் கட்டுமான நிறுவனம், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, அரசு அனுமதி கொடுத்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றது.
'ராம்சார்' எல்லை நிர்ணய பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை, சதுப்புநிலம், அதையொட்டி பகுதிகளில், கட்டுமான பணிகளை மேற்கொள்ளக்கூடாது என, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
ஏற்கனவே, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பாதுகாக்கும் வகையில், சில உத்தரவுகளை பிறப்பித்தது. இதையடுத்து, சதுப்பு நிலத்தையொட்டிய, 1 கி.மீ., வரை கட்டுமான பணிகளுக்கு, சி.எம்.டி.ஏ., தடை விதித்துள்ளது.
இதன்படி, சோழிங்கநல்லுார், பெருங்குடி மண்டலம் மற்றும் சதுப்பு நிலத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளுக்கு உட்பட்ட பெரும்பாக்கம், அரசன்கழனி, மேடவாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், செம்மஞ்சேரி, தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட 16 வருவாய் கிராமங்களில், 1,300 சர்வே எண்களுக்கு கட்டுமான பணிகளுக்கு தடை ஏற்பட்டுள்ளது.
பசுமை தீர்ப்பாயம், சென்னை உயர் நீதிமன்ற தடையால், சதுப்பு நிலத்தில் இருந்து, 1 கி.மீ., உள்ள சோழிங்கநல்லுார், பெருங்குடி, அடையாறு மண்டலங்கள் மற்றும் பெரும்பாக்கம், சித்தலாப்பாக்கம், மேடவாக்கம் ஊராட்சிகளில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. பட்டா இடமாக இருந்தும் அனுமதி கிடைக்கவில்லை. இனி யாரும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மண்டலங்கள் மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்களுக்கு, மாதம் 100க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள், ஊராட்சி, மாநகராட்சி, சி.எம்.டி.ஏ.,வில் விண்ணப்பிக்கப்படும். தனி வீடு, அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் ஐ.டி., நிறுவனங்கள், வணிக கட்டடங்கள் கட்ட முடியாமல் பலர் உள்ளனர்.
இந்த தடை உத்தரவுக்கு முன், அனுமதி வாங்கி பணிகளை துவக்கியவர்களும் பணியை தொடரலாமா; கைவிட வேண்டுமா; இனி கட்டுமான அனுமதி பெற முடியுமா என, குழப்பத்தில் உள்ளனர்.
'ராம்சார் எல்லை பணிகள் இப்போது முடியாது; 240 நாட்களுக்கு மேலாகும்' என, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 'ராம்சார்' எல்லையை வரையறை செய்தால் மட்டுமே, இந்த குழப்பங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும்.
அலட்சியமே காரணம் இதுகுறித்து, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் தமிழக துணை தலைவர் பி.மணிசங்கர் கூறியதாவது:
கடலோர ஒழுங்குமுறை மேலாண்மை மண்டலம், தொல்லியல் பகுதிகளில் எல்லை வரையறை செய்வதற்கு தெளிவான நடைமுறை உள்ளது. அதுபோன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் எல்லையை வரையறை செய்வதற்கு, அரசு தயங்குவது ஏன் என்பது புதிராக உள்ளது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ராம்சார் பகுதிக்குள் கட்டடம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று யாரும் கேட்கவில்லை. பாதுகாக்கப்பட்ட பகுதி தவிர்த்து, மீதம் உள்ள இடங்கள் எவை என்று தான் கேட்கிறோம்.
கடந்த, 2022ல் இருந்து இப்போது வரை எல்லை வரையறை செய்ய முடியாமல் வருவாய் துறை, வனத்துறை அதிகாரிகள் தடுமாறுகின்றனர். இது தொடர்பான வழக்கு பசுமை தீர்ப்பாயத்தில் வந்தபோது, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மவுனமாக இருந்ததே, தற்போதைய பிரச்னைக்கு காரணம்.
சென்னை போன்ற மக்கள் தொகை நெருக்கம் உள்ள பகுதியில், குறிப்பிட்ட பகுதிக்கு எல்லையை வரையறுப்பதில் அரசு துறையினர் மிகுந்த அலட்சியமாக நடந்து கொள்வதே, மக்கள் பாதிக்கப்பட வழிவகுத்துள்ளது.
இப்போதும், எல்லை வரையறை பணிகளை எப்போது முடிப்போம் என்பதை தெளிவாக சொல்ல முடியாத நிலையில் அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

