/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் வருமானம் கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்தப்படுமா?
/
ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் வருமானம் கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்தப்படுமா?
ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் வருமானம் கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்தப்படுமா?
ஆண்டுக்கு ரூ.6 கோடிக்கு மேல் வருமானம் கந்தசுவாமி கோவில் தரம் உயர்த்தப்படுமா?
ADDED : ஜன 19, 2025 02:25 AM

திருப்போரூர், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக சென்னை, மதுரை, புதுச்சேரி, திருப்போரூர், கருநிலம், பொன்மார், ஆலத்துார், மறைமலை நகர் உட்பட பல்வேறு இடங்களில் 600 ஏக்கர் நிலங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் கடைகள் உள்ளன.
பக்தர்களின் வருகை அதிகரிப்பு, பழைய மாமல்லபுரம் சாலையில் போக்குவரத்து அதிகரிப்பு, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இவற்றுடன் உண்டியல் வருமானம், வாகன நுழைவு கட்டணம், நிலக்குத்தகை மற்றும் கட்டிட வாடகை, பிரசாத கடை ஆண்டு ஏலம், காணிக்கை முடி ஏலம் ஆகியவற்றால், வருமானம் அதிகரிக்கிறது.
இதன் காரணமாக, ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வருவாய் பிரிவில் இருந்த இந்த கோவில், தற்போது 6 கோடி ரூபாய் வருவாய் கோவிலாக மாறியுள்ளது.
இதற்கிடையே, பக்தர்களை அதிகளவில் வரவழைப்பதற்காக கோவில் அருகே 3 கோடி ரூபாய் மதிப்பில் கோவில் சார்ந்த திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, பக்தர்கள் ஓய்வு கூடம் புதியதாக கட்டப்பட்டுள்ளது.
மேலும், 6 கோடி ரூபாய் மதிப்பில், 500 பேர் அமரும் வகையில் பல்வேறு வசதிகளுடன் திருமண மண்டபம் கட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருவாய் பெருகி வரும் இந்த கோவில், சிறப்பு நிலை செயல் அலுவலர் நிலையிலேயே இருக்கிறது. ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் உள்ள கோவில்களை உதவி ஆணையர் பராமரிப்பின் கீழ் கொண்டு வந்து நிர்வகிக்க வேண்டும்.
அந்த வகையில் பார்த்தால் ஆண்டிற்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வரும் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் தற்போது வரை செயல் அலுவலர் நிலையிலேயே தரம் உயர்த்தாமல் உள்ளது.
கோவில் நிர்வாகத்தை தரம் உயர்த்தினால், பல்வேறு முக்கிய முடிவுகளை உதவி ஆணையரே எடுத்து செயல்படுத்த முடியும், பணிபுரியும் பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம், கோவிலில் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு கூடுதல் நிதி கிடைக்கும், பக்தர்களுக்கான வசதிகள் மேம்படும்.
எனவே, ஹிந்து சமய அறநிலையத்துறை திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகத்தின் தரத்தை செயல் அலுவலர் அளவில் இருந்து உதவி ஆணையர் தரத்திற்கு உயர்த்த வேண்டுமென பக்தர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

