/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஓ.எம்.ஆரில் தொடரும் விபத்து பலிகள் குமரன் நகர் சிக்னல் திறக்கப்படுமா?
/
ஓ.எம்.ஆரில் தொடரும் விபத்து பலிகள் குமரன் நகர் சிக்னல் திறக்கப்படுமா?
ஓ.எம்.ஆரில் தொடரும் விபத்து பலிகள் குமரன் நகர் சிக்னல் திறக்கப்படுமா?
ஓ.எம்.ஆரில் தொடரும் விபத்து பலிகள் குமரன் நகர் சிக்னல் திறக்கப்படுமா?
ADDED : நவ 28, 2024 08:04 PM
சோழிங்கநல்லுார்:செம்மஞ்சேரி, சித்தாலப்பாக்கத்தில் இருந்து நாவலுார் நோக்கி, ஓ.எம்.ஆர்., குமரன் நகர் வழியாக செல்ல வேண்டும். மெட்ரோ ரயில் பணிக்காக, குமரன் நகர் சந்திப்பு சிக்னலை அணைத்து, அங்கு தடுப்பு அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால், இடது பக்கம் திரும்பி, 2 கி.மீ., துாரம் சென்று, ஆவின் சிக்னல் திரும்பி, மீண்டும் 2 கி.மீ., சென்று, குமரன்நகர் சிக்னலை அடைந்து, அங்கிருந்து நாவலுார் செல்ல வேண்டி உள்ளது.
இதனால், ஆவின் சந்திப்பில் நெரிசல் அதிகரிப்பதுடன், வாகன ஓட்டிகள் சுற்றி செல்ல வேண்டியுள்ளது.
அதேபோல், சோழிங்கநல்லுாரில் இருந்து சித்தாலப்பாக்கம் நோக்கி செல்ல, குமரன் நகரில் இருந்து, 1.5 கி.மீ., துாரம் சென்று, யு-டர்ன் செய்து, செல்ல வேண்டி உள்ளது.
அதிக துாரம் சுற்றுவதால், சில வாகன ஓட்டிகள் எதிர் திசையில் செல்கின்றனர்.
இந்த மாதத்தில், எதிர் திசையில் சென்ற, கல்லுாரி மாணவி உட்பட மூன்று பேர் விபத்தில் சிக்கி பலியாகினர்.
சில சந்திப்புகளில் யு - டர்ன் அமைத்ததால், வாகன நெரிசல் குறைந்துள்ளது. ஆனால், உள்வட்ட சாலையில் இருந்து, அதிக வாகனங்கள் ஓ.எம்.ஆரை சேரும் சந்திப்புகளில், சிக்னல் தேவைப்படுகிறது.
இதனால், குமரன் நகர் சிக்னலை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
ஓ.எம்.ஆரில், மெட்ரோ ரயில் பணிக்காக பெரும்பாலான சிக்னல்களை அகற்றி, யு - டர்ன் அமைக்கப்பட்டது.
குமரன் நகர் சந்திப்பு தடுப்பை அகற்றி சிக்னல் அமைத்தால் தான், வாகனங்கள் சீராக செல்லும்; விபத்து தடுக்கப்படும்.
குமரன் நகர் சந்திப்பில் தடுப்பை அகற்றி சிக்னல் அமைக்க வாகன ஓட்டிகள், மக்கள் பிரதிநிதிகள், நலச்சங்கங்கள், வியாபாரிகள், சட்டம் ஒழுங்கு போலீசார் கூறினர். சிக்னல் அமைத்தால், அங்கு போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டும். ஆனால், போலீசார் பற்றாக்குறை உள்ளது. சோழிங்கநல்லுார், காரப்பாக்கம் சந்திப்புகளில் நிற்க வைக்க மட்டுமே போலீசார் உள்ளனர்.
மெட்ரோ ரயில் ஒப்பந்த நிறுவனம் போதிய ஒத்துழைப்பும் தருவதில்லை. சரியான திட்டமிடல் இல்லாமல் பணி செய்வதால், யு - டர்ன் அமைப்பதிலே குழப்பம் ஏற்படுகிறது. போலீசார் பற்றாக்குறை குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் தான், குமரன் நகர் சிக்னலை திறக்க முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.