/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தரம் உயருமா? ஆண்டுக்கு ரூ.3 கோடி வருவாய் ஈட்டுகிறது
/
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தரம் உயருமா? ஆண்டுக்கு ரூ.3 கோடி வருவாய் ஈட்டுகிறது
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தரம் உயருமா? ஆண்டுக்கு ரூ.3 கோடி வருவாய் ஈட்டுகிறது
திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தரம் உயருமா? ஆண்டுக்கு ரூ.3 கோடி வருவாய் ஈட்டுகிறது
ADDED : அக் 09, 2025 03:14 AM
திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 1899ல் ஆங்கிலேயர் காலத்தில் ஏற்படுத்தப்பட்டது. தேர்வு நிலையில் இருந்து, பின்னர் சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.
மக்கள் தொகை இங்கு திருக்கழுக்குன்றம், ருத்திரான்கோவில், மங்கலம், முத்திகைநல்லான்குப்பம், நாவலுார் ஆகிய பகுதிகள் ஒருங்கிணைந்து, 18 வார்டு பகுதிகள் உள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில், அதிக பரப்பும், மக்கள் தொகையும் கொண்டது.
கடந்த 2011 கணக்கெடுப்பின்படி 30,000 பேர் வசித்த இங்கு, தற்போது மேலும் 5,000த்திற்கும் மேற்பட்டோர் அதிகரித்திருப்பர்.
ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துவரி, 39 லட்சம் ரூபாய் குடிநீர் கட்டணம், தொழில்வரி, கட்டட வரைபட அங்கீகார அனுமதி உள்ளிட்ட வகைகளில், மூன்று கோடி ரூபாய்க்கும் மேல் ஆண்டு வருமானம் உள்ளது.
தாலுகா, வட்டார வளர்ச்சி ஆகிய நிர்வாகங்களின் தலைமையிடமாக, இப்பகுதி உள்ளது. மேலும், சார் -- பதிவாளர், பொதுப்பணி, நெடுஞ்சாலை, வேளாண்மை என அரசு அலுவலகங்கள், பொதுத்துறை, தனியார் வங்கிகள், அரசு மருத்துவமனை, அரசு, தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் இயங்குகின்றன.
அரசு நலத்திட்ட சேவைகளுக்காக, ஏராளமானோர் இங்குள்ள அரசு அலுவலகங்களுக்கு வருகின்றனர். ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், பவுர்ணமி கிரிவல பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது.
பரிந்துரை மாவட்ட தலைநகர் செங்கல்பட்டிலிருந்து, 14 கி.மீ., தொலைவில் உள்ள நிலையில், இப்பகுதியில் அதிக அளவில் குடியேறி, வசிப்பிட பகுதிகள் விரிவடைந்துள்ளன.
மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில், நகராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளுக்கு முன்பே, பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசிடம் பரிந்துரைக்கப்பட்டது.
ஆனால், முதலில் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சி, சில ஆண்டுகளுக்கு முன், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மக்கள் தொகையிலும், பரப்பிலும் குறைந்த மாமல்லபுரம் பேரூராட்சியும், கடந்த பிப்ரவரி மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டது.
ஆனால், திருக்கழுக்குன்றத்தை நகராட்சியாக தரம் உயர்த்தவேண்டிய அவசியம் இருந்தும், தமிழக அரசு அலட்சியப்படுத்துகிறது.
நகராட்சி நிர்வாகம் எனில், ஆணையருக்கே நிர்வாக அதிகார முக்கியத்துவம் என்பதாக கருதி, தரம் உயர்த்துவதில், இப்பகுதி அரசியல் பிரமுகர்கள் அக்கறை காட்டாததாக தெரிகிறது.
திருக்கழுக்குன்றம், பேரூராட்சிகளை தரம் உயர்த்த, ஓராண்டிற்கு முன் முடிவெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது வரை அறிவிக்கப்படவில்லை.
இம்மாதம் நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தில், இதுகுறித்து அரசு அறிவிக்க, வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.