
மாமல்லபுரத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு... விழாக்காலம் துவங்குவதால் முன்னேற்பாடு அவசியம்
மாமல்லபுரம்: சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா, ஆங்கில புத்தாண்டு, பொங்கல், கர்நாடக பக்தர்கள் படையெடுப்பு என, விழாக்காலம் துவங்க உள்ளது. இக்காலத்தில் வாகன நெரிசலால் போக்குவரத்து முடங்காமல் தவிர்க்க, நகராட்சி நிர்வாகம் முன்னேற்பாடு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னையை ஒட்டி, சர்வதேச பாரம்பரிய சுற்றுலா நகரமான மாமல்லபுரம் உள்ளது. இங்குள்ள பல்லவர் கால கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சிற்பங்களை ரசிக்க உள்நாடு, சர்வதேச பயணியர் அதிக அளவில் வருகின்றனர்.
வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை, பண்டிகை ஆகிய நாட்களில் சென்னை பகுதியினர், பொழுதுபோக்கிற்காக மாமல்லபுரத்திற்கு படையெடுப்பர். இதனால், சுற்றுலா களைகட்டும்.
குறுகிய சாலை மாமல்லபுரத்திற்கு பெரும்பாலானோர் கார், வேன், பேருந்து உள்ளிட்ட தனி வாகனங்களில் வருகின்றனர். அந்த வகையில், ஒரே நாளில் ஏராளமான வாகனங்கள் மாமல்லபுரத்தில் குவியும் நிலையில், சுற்றுலா போக்குவரத்திற்கு ஏற்ற அகலமான சாலைகள் இங்கு இல்லை.
இங்குள்ள கிழக்கு ராஜ வீதி சாலை, கடற்கரை சாலை, பழைய சிற்பக்கல்லுாரி சாலை, தென்மாட வீதி, ஐந்து ரதங்கள் வீதி, கலங்கரை விளக்க சாலை, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை, பகிங்ஹாம் கால்வாய் கரை சாலை ஆகியவை, பிரதான போக்குவரத்து சாலைகளாக உள்ளன. இவற்றில் தான், உள்ளூர் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து மிக குறைவாக இருந்த போது, அன்றைய கால தேவைக்கேற்ப, இந்த சாலைகள் 22 அடி அகல சாலைகளாக அமைக்கப்பட்டன.
தற்போது சாலையோர கடைகள், நடைபாதை கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால், மேலும் குறுகியுள்ளன.
இதனால், சுற்றுலா களைகட்டும் நாட்களில், வாகனங்கள் செல்ல முடியாமல், பல ஆண்டுகளாக போக்குவரத்து பாதிப்பு பிரச்னை நீடிக்கிறது. சுற்றுலா வாகனங்கள் காலையிலேயே படையெடுக்கும் நிலையில், கடும் நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்து முடங்குகிறது.
வாகனங்கள், வெளியிலிருந்து உள்ளே நுழையவோ, உள்ளிருந்து வெளியேறவோ, எதிரெதிர் திசைகளில் செல்லவோ இயலாமல், ஸ்தம்பிக்கும் நிலை நீடிக்கிறது.
சாலைகளை வாகனங்கள் அடைத்துக் கொள்வதால், பாதசாரிகள் நடந்து செல்லவே இடமின்றி தவிக்கின்றனர்.
அப்போது வாகனங்கள் ஒலி எழுப்புதல், புகை ஆகியவற்றால், சுற்றுலா பயணியர் மூச்சுத் திணறுகின்றனர். ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வெளியேற முயல்வதால், இரவு வரை மாமல்லபுரத்தில் நெரிசல் நீடிக்கிறது. இதன் காரணமாக, மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை.
பாதிப்பு இந்நிலையில், இம்மாதம் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்ததும், விடுமுறை விடப்படும். அன்றைய நாளில் இருந்தே, சுற்றுலா பயணியர் அதிக அளவில் வருவர்.
இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, இந்திய நாட்டிய விழா, பொங்கல் என, விழாக்காலமாக அமைகிறது.
இதுமட்டுமின்றி, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் வழிபட குவியும் கர்நாடக, ஆந்திர மாநில பக்தர்களும், தினமும் ஏராளமானோர் பேருந்துகளில் மாமல்ல புரத்திற்கு வருவர்.
இந்த வகையில் சுற்றுலா வாகனங்கள், வெளிமாநில பக்தர்களின் பேருந்துகள் என, தினமும் அதிக அளவில் குவியும் போது, அவற்றை நிறுத்த, முறையான வாகன நிறுத்துமிடம் இல்லை.
அதனால், அவற்றை சாலையில் நிறுத்துவதால், அடுத்தடுத்து வரும் வாகனங்கள் செல்ல முடியாமல், கடும் நெரிசல் ஏற்படும். இதனால் சுற்றுலா பயணியர் மட்டுமின்றி, மாமல்லபுரம் நகரவாசிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.
எனவே நகராட்சி நிர்வாகம், காவல் துறை, நெடுஞ்சாலை, சுற்றுலாத் துறையினர் ஒருங்கிணைந்து, மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு, முன்னேற்பாடுகள் செய்ய வேண்டுமென, சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, இந்திய நாட்டிய விழா, பொங்கல் என, மாமல்லபுரத்தில் அடுத்தடுத்து விழாக்கள் நடைபெற உள்ளன. இதனால், நகரில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்நிலையில், சுற்றுலா பயணியர் நெரிசலில் சிக்கி பாதிக்காதவாறு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, நடவடிக்கை எடுக்கப்படும். - அறிவழகன், மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி.,

