/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூர் புதிய வருவாய் கோட்டம்... உருவாகுமா?:சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்ப்பு
/
திருப்போரூர் புதிய வருவாய் கோட்டம்... உருவாகுமா?:சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்ப்பு
திருப்போரூர் புதிய வருவாய் கோட்டம்... உருவாகுமா?:சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்ப்பு
திருப்போரூர் புதிய வருவாய் கோட்டம்... உருவாகுமா?:சமூக ஆர்வலர்கள், மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 07, 2025 10:47 PM

திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டங்கள் உள்ள நிலையில், கூடுதலாக நிர்வாக வசதிக்காக, திருப்போரூர் அல்லது கேளம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் கோட்டம் உருவாக்க, சமூக ஆர்வலர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், மிக பழமையான சட்டசபை தொகுதியாக திருப்போரூர் அமைந்துள்ளது. திருப்போரூர் ஒன்றியத்தில் 50 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி உள்ளன. இந்த ஒன்றியத்தில் திருப்போரூர் வட்டம் மற்றும் வண்டலுார் வட்டம் சார்ந்த கிராமங்கள் உள்ளன.
திருப்போரூர் ஒன்றியத்தில், சிறுசேரி சிப்காட் பகுதியில் 30க்கும் மேற்பட்ட ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. ஆலத்துார் சிட்கோவில் 30க்கும் மேற்பட்ட கெமிக்கல், மருந்து தொழிற்சாலைகள், குன்னப்பட்டு சிப்காட்டில் தொழில் நகரத்தில் 15க்கும் மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளன.
அதேபோல், ஆன்மிக தலமாக, திருப்போரூரில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் கிருத்திகை, சஷ்டி, விடுமுறை தினங்கள், செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஏராளமான திருமணங்கள் நடைபெறுகின்றன.
சுற்றுலா பகுதியாக இ.சி.ஆர்., சாலையில் உள்ள கோவளம் கடற்கரை பகுதி, முட்டுக்காடு படகு குழாம், தனியார் எம்.ஜி.எம்., டிஸ்னிவேர்ல்ட் என்ற கேளிக்கை பூங்கா, வடநெம்மேலி முதலை பண்ணை உள்ளிட்டவை உள்ளன.
முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் வந்து செல்லும் நட்சத்திர விடுதிகள் கோவளம், வடநெம்மேலி போன்ற பகுதிகளில் உள்ளன.
மேலும், இள்ளலுார் பகுதியில் 65 ஏக்கர் பரப்பில் பிரமாண்ட பொழுதுபோக்கு பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. முட்டுகாடு பகுதியில், 525 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கலைஞர் பன்னாட்டு மாநாட்டு அரங்க மையம் அமைக்கும் பணிகளும் நடக்கின்றன. கானத்துார், நாவலுார், ஏகாட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மால்கள் போன்ற பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன.
அதேபோல், கல்வி நிறுவனங்களாக பிரபல தனியார் பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகளும், பிரபல மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரிகளும் உள்ளன.
சிறுசேரி சிப்காட்டில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இங்கு, மென்பொருள் தொழில் நிறுவனங்கள் இருப்பதால் மெட்ரோ ரயில் முனையம் அமைய உள்ளதாக தெரிகிறது.
பரபரப்பாக இயங்கி நிர்வாக நலனுக்காக, திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகம் கடந்த ஜூலை மாதம் கேளம்பாக்கம், நாவலுார் என மூன்றாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.
இவ்வாறு திருப்போரூர் ஒன்றியத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பிரபல கல்லுாரிகள், நிகர்நிலை பல்கலைகள், மருத்துவமனைகள், சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளிட்டவை உள்ளன.
நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பிரச்சனைகளும் அதிகரித்து வருகிறது.
திருப்போரூர், மானாமதி, காயார், கேளம்பாக்கம், கானத்துார், தாழம்பூர் காவல் நிலையங்களில் சாலை விபத்துகள், கொலை முயற்சி, நிலப்பிரச்னை வழக்குகள் என மாதம் 4,000க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகின்றன.
இந்நிலையில் திருப்போரூர் சார்ந்த வருவாய் கோட்டம் செங்கல்பட்டில் உள்ளது. திருப்போரூர், வண்டலுார் வட்டங்களுக்கான வருவாய் கோட்டத்தை திருப்போரூர் அல்லது கேளம்பாக்கம் பகுதியை மையமாக கொண்டு உருவாக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்துள்ளது.
இதனால், சட்டம் - ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது எளிதாகும் வகையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருப்போரூர் அல்லது கேளம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு வருவாய் கோட்டம் அமைக்க வேண்டும். இங்கு, ஒரு வருவாய் கோட்டம் அமைப்பதற்கு தேவையான அனைத்து சாத்திய கூறுகளும் உள்ளன.
திருப்போரூர் வட்டத்தில், 84 கிராமங்கள் உள்ளன. வண்டலுார் வட்டத்தில் 37 கிராமங்கள் உள்ளன. சட்டம்- ஒழுங்கு போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், விசாரனை, ஆய்வு மேற்கொள்ளுதல் என அனைத்து பணிகளுக்கும் பொதுமக்கள் , அரசு அதிகாரிகளுக்கும் எளிதாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.