/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாராயம் விற்ற பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
/
சாராயம் விற்ற பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை
ADDED : டிச 27, 2024 09:16 PM
செங்கல்பட்டு:சாராயம் விற்பனை செய்த வழக்கில், பெண்ணிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செங்கல்பட்டு, பொன்விளைந்தகளத்துார் அடுத்த புன்னப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவரது மனைவி இந்திரா, 58; சாராய வியாபாரி. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி, இவர் சாராயம் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
புன்னப்பட்டுக்கு வந்த போலீசார், அவரை மடக்கிப் பிடித்து, 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்திராவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெயஸ்ரீ முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில், வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார்.
வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், இந்திராவிற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஜெயஸ்ரீ நேற்று தீர்ப்பளித்தார்.

