/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வார்டில் பணிகள் முறையாக நடப்பதில்லை: தி.மு.க.,- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
/
வார்டில் பணிகள் முறையாக நடப்பதில்லை: தி.மு.க.,- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
வார்டில் பணிகள் முறையாக நடப்பதில்லை: தி.மு.க.,- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
வார்டில் பணிகள் முறையாக நடப்பதில்லை: தி.மு.க.,- அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு
ADDED : டிச 30, 2025 04:34 AM
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், ஆளும் கட்சியான தி.மு.க., கவுன்சிலர்களும், அ.தி.மு.க., கவுன்சிலர்களும், தங்கள் வார்டில் பணிகள் முறையாக நடக்கவில்லை என, சரமாரி குற்றஞ்சாட்டினர்.
தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நேற்று நடந்தது.
இதில், கமிஷனர் பாலச்சந்தர், துணை மேயர் காமராஜ், அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
நியமன கவுன்சிலராக நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி பெண் கவிதா என்பவரும், கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில், சாதாரண மற்றும் அவசர பொருள் என, 189 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
யாகூப், ம.ம.க., வார்டு-50
கமிஷனர் உத்தரவிட்டும், மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. மக்கள் பிரச்னை தொடர்பாக போன் செய்தால், அமைச்சர் கூட எடுத்து பேசுவார்.
ஆனால், பொறியியல் பிரிவில் பணி செய்யும் நபர், போனை எடுப்பதே இல்லை. சண்முகம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
காயிதே மில்லத் நினைவாக, அவர் வாழ்ந்த குரோம்பேட்டையில், நினைவு நுழைவாயில் அமைக்கவும் மற்றும் பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும்.
காமராஜ், தி.மு.க., 4வது மண்டல தலைவர்
தாம்பரம் இறைச்சி மார்க்கெட்டில், பல கடைகள் மூடியே வைக்கப்பட்டு உள்ளன. அந்த இடத்தை சுத்தம் செய்து, கடைகளை ஏலம் விட்டால், வியாபாரிகளுக்கு வசதியாக இருக்கும்.
அதேபோல், மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்கு நன்றி.
இதுபோன்ற நடவடிக்கையின் போது, யாராவது எதிர்த்து பேசினால் அப்படியே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர். அதனால், ஆக்கிரமிப்பை அகற்றுவதில் பாரபட்சம் இல்லாமல் அகற்றி, சாலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்.
மாநகராட்சி அலுவலகம் இயங்கும் எம்.ஆர்.எம்., சாலையில், ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல், தாம்பரம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கிய முதல்வருக்கு நன்றி.
சரண்யா, தி.மு.க., வார்டு-38
வினோபாஜி நகர் ஏழாவது தெருவில், 7 அடி அகலத்திற்கு சாலையை ஆக்கிரமித்து கடை கட்டியுள்ளனர். இதனால், அந்த இடத்தில் 'பீக் ஹவர்'சில் கடும் நெரிசல் ஏற்பட்டு, விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.
இது தொடர்பாக, எத்தனையோ முறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. அஸ்தினாபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில், சமீபத்தில் புதிய கட்டடம் திறக்கப்பட்டது.
ஆனால், அந்த வகுப்பறைகளுக்கு, இதுவரை மின் வசதி செய்யப்படவில்லை.
அதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. அதேபோல், இந்த வார்டில் உள்ள ஐந்து பூங்காக்களை சீரமைக்க 'டெண்டர்' எடுத்து, எட்டு மாதங்கள் ஆகின்றன. இதுவரை பணிகள் முடியவில்லை. எப்போது பணிகள் முடியும் என, மக்கள் கேட்கின்றனர்.
கற்பகம், தி.மு.க., வார்டு- 41,
3வது மண்டலத்தில், மண்டல தலைவர் இல்லை. ஆனால், அதிகாரிகள் இருக்கின்றனர். அப்படியிருந்தும், மண்டலக்குழு கூட்டத்தை நடத்தாமல் இருப்பது ஏன்? இந்த மண்டலத்தில் உள்ள கவுன்சிலர்களின் குறைகளை யாரிடம் தெரிவிப்பது?
கிருஷ்ணா நகரில், குப்பை வாகனம் பழுதாகி, இரண்டு மாதங்கள் ஆகின்றன. இதுவரை சரிசெய்யவில்லை.
கேட்டால், இவ்வளவு செலவாகிறது, அவ்வளவு செலவாகிறது என்கின்றனர். அதனால், குப்பை அகற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நரேஷ் கண்ணா, தி.மு.க., வார்டு-2
அனகாபுத்துாரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்தும், பல சாலைகளை சீரமைக்காததால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால், பணிகள் முடிந்த சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சீரமைக்க வேண்டும்.
செந்தில்குமார், காங்., வார்டு-25
15 லட்சம் ரூபாய்க்கு சாலை ஒட்டுப் பணிக்கு டெண்டர் எடுத்துவிட்டு, அந்த பணியை சரியாகவே செய்வதில்லை. அவர்கள் எங்கு வேலை செய்தனர், முறையாக செய்தனரா என்பதும் தெரிவதில்லை. இந்த குளறுபடியை தீர்க்க, சாலை போட்டவர்களுக்கே ஒட்டுப் பணிகளையும் கொடுத்தால், முறையாக சீரமைப்பதற்கு வாய்ப்பாக இருக்கும்.
பாலச்சந்தர்- கமிஷனர்
மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், முன்மாதிரி திட்டமாக, 50 லட்சம் ரூபாய் செலவில், இலவச 'டயாலிசிஸ்' மையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
அதேபோல் மாடம்பாக்கம், சிட்லப்பாக்கம், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஓரிரு நாட்களில், அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். அதன் பின், டெண்டர் கோரப்பட்டு பணிகள் துவக்கப்படும்.
சங்கர், அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கொடுக்கும் மனுக்கள் தொடர்பாக, மூன்று ஆண்டுகளாக எந்த வேலையும் நடக்கவில்லை. வேலை செய்யவில்லை என்றால், மாநகராட்சியில் நிதி இல்லை என, எங்களுக்கு பதில் அனுப்பி விடுங்கள். சேலையூர், சிட்லப்பாக்கம், பழைய தாம்பரம், இரும்புலியூர் பகுதிகளில், பூர்விகமாக வசிக்கும் பட்டாதாரர்களுக்கு, மூன்று ஆண்டுகள் ஆகியும் வரி விதிக்கப்படவில்லை.
அதேபோல், பாதாள சாக்கடை திட்டத்திற்காக, சட்டசபையில் 750 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. அந்த திட்டம் என்னாச்சு? மேலும், அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு, எந்த அதிகாரியும் வருவதும் இல்லை. போனை எடுப்பதும் இல்லை. எதை கூறினாலும் செய்வதும் இல்லை.
இவ்வாறு, விவாதம் நடந்தது.

