/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் ஏரியில் தானியங்கி ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்
/
மதுராந்தகம் ஏரியில் தானியங்கி ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்
மதுராந்தகம் ஏரியில் தானியங்கி ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்
மதுராந்தகம் ஏரியில் தானியங்கி ஷட்டர் பொருத்தும் பணி தீவிரம்
ADDED : மே 31, 2025 11:55 PM

மதுராந்தகம் மதுராந்தகத்தில் உள்ள ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 2,500 ஏக்கர் ஆகும்.
ஐந்து மதகுகள் வழியாக 4,000 ஏக்கர் விவசாய நிலங்களும், மேல்மட்ட கால்வாய் வழியாக, 30 ஏரிகளுக்கு நீர் கொண்டு சென்று, அதிலிருந்து 3,000 ஏக்கர் நிலங்கள் என மொத்தம் 7,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மதுராந்தகம் ஏரியில், 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, துார்வாரி ஆழப்படுத்துதல், கொள்ளளவை உயர்த்துதல் மற்றும் ஏரியின் கலிங்குகளை கதவணையுடன் கூடிய உபரி நீர் போக்கி கட்டமைக்கும் பணிகள், கடந்த 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஏரியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்காக கூடுதலாக, 43 கோடி ரூபாய், கடந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 160 கோடி ரூபாய் செலவில், மதுராந்தகம் ஏரி சீரமைக்கப்பட்டு வருகிறது.
நீர்த்தேக்கம்
வந்தவாசி மற்றும் உத்திரமேரூர் ஏரிகள் நிரம்பி, கலங்கல் வழியாக வெளியேறும் உபரி நீர், கிளியாறு மற்றும் நெல்வாய் ஆறு ஆகியவற்றில் இருந்து வரும் நீர், மதுராந்தகம் ஏரிக்கு மிக முக்கிய நீர் ஆதாரமாகும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக, பணிகள் நடைபெற்று வந்ததால், ஏரிக்கு வரும் நீர் முழுதும் வெளியேற்றப்பட்டது.
தற்போது, கலிங்கு அமைக்கும் பணி நடந்து வருவதால், ஏரியில் விவசாய பயன்பாட்டிற்காக, 40 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டது.
இதனால், விவசாய பயன்பாடு மற்றும் மதுராந்தகம் ஏரிப்பகுதியில் உள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர்மட்டம், கோடை விடுமுறையால் பாதிக்காத வகையில் நீர் தேக்கி வைக்கப்பட்டது.
தற்போது, முதல்போக சாகுபடி முடிந்து, இரண்டாவது போகம் சாகுபடிக்கு, பாசன மதகுகள் வழியாக ஏரியிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்பு
மதுராந்தகம் ஏரியில், கடந்த 2022 ல் தொடங்கப்பட்ட பணியால் 3 ஆண்டுகளாக நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
அதனால், கழனி வெளிப் பகுதிகளில், பாசன மதகுகள் வழியாக நீர் கொண்டு செல்லப்படும் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மதுராந்தகம் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
கிளியாறு வடிநில உபக்கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மதுராந்தகம் ஏரியில் தானியங்கி ஷட்டர்கள் பொருத்தும் பணி தற்போது நடந்து வருகிறது. ஏரியில் ஐந்து மதகுகள் முழுதும் சீரமைக்கப்பட்டுள்ளன.
விவசாய பயன்பாட்டிற்காக, தற்போது பாசன மதகுகள் வழியாக, இரண்டாவது போகம் சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஏரியில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
இன்னும், மூன்று மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவுற்று, விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.