/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 64 ஏரிகள் துார்வாரி சீரமைக்கும் பணி... துவக்கம்: பருவமழை துவங்கும் முன் பணி முடிக்க உத்தரவு
/
செங்கையில் 64 ஏரிகள் துார்வாரி சீரமைக்கும் பணி... துவக்கம்: பருவமழை துவங்கும் முன் பணி முடிக்க உத்தரவு
செங்கையில் 64 ஏரிகள் துார்வாரி சீரமைக்கும் பணி... துவக்கம்: பருவமழை துவங்கும் முன் பணி முடிக்க உத்தரவு
செங்கையில் 64 ஏரிகள் துார்வாரி சீரமைக்கும் பணி... துவக்கம்: பருவமழை துவங்கும் முன் பணி முடிக்க உத்தரவு
ADDED : ஏப் 16, 2025 08:13 PM

செங்கல்பட்டு:செங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 64 ஏரிகள் சமூக பொறுப்பு நிதி 5.17 கோடி ரூபாய் செலவில் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கி உள்ளது. ஏரிகள் துார்வரும் பணிக்கு, முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், 620 ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இங்கு மழைக்காலங்களில், தண்ணீர் முழு கொள்ளளவு நிரம்பி வழியும். ஏரிபாசனத்தின் மூலம், நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாக ஏரிகள் துார்வாரி சீரமைக்கப்படால் உள்ளது.
இதை சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், கலெக்டரிடம், பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில், நீர் நிலைகளை துார்வாரி சீரமைக்க, தனியார் நிறுவனங்களுக்கு, கலெக்டர் அருண்ராஜ் வேண்டுகோள் விடுத்தார்.
அதன்பின், தனியார் நிறுவனங்கள் ஏரி, குளங்களை, சமூக பொறுப்பு நிதியின் கீழ் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டரிடம் உறுதி அளித்தன.
இதையடுத்து, சென்னை அணுமின் நிலையம், சமூக பொறுப்பு நிதியின் கீழ், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், 13 ஏரிகளும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில், எட்டு ஏரிகளும், லத்துார் ஊராட்சி ஒன்றியத்தில் ஏழு ஏரிகள் என மொத்தம் 28 ஏரிகளில், துார்வாரி கரைகள் பலப்படுத்த, 1 கோடியே 68 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்தது.
இதேபோல், தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில், இருந்து மேலும் 36 ஏரிகளிலும் துார்வாரி சீரமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தில், சமூக பொறுப்பு நிதியின் கீழ், 64 ஏரிகள் முழுமையாக துார் வாரி சீரமைக்க 5 கோடியே 17 லட்சம் ரூபாய் நிதியை, கலெக்டரிடம் நிறுவனங்கள் வழங்கி உள்ளது.
இப்பணிகளுக்கு, நிர்வாக அனுமதி வழங்கி, ஊரக வளர்ச்சித்துறைக்கு, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். அதன்பின், ஏரி துார்வாரி சீரமைக்கும் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் எடுத்தனர்.
தற்போது, மாவட்டத்தில் ஏரிகள் துார்வரும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள் கண்காணித்து, பணி விவரங்களை, கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என, கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உத்தரவிட்டார்.
மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, சமூக பொறுப்பு நிதியின் கீழ், 64 ஏரிகள் துார்வாரி சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை, வட கிழக்கு பருவமழை துவங்கும் முன் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏரியில், மழைக்காலங்களில் கொள்ளளவு உயரும், ஏரியின் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதால், மக்களுக்கு பயன் ஏற்படும்.
நாராயணசர்மா
கூடுதல் கலெக்டர்
செங்கல்பட்டு.
ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருந்தது. ஏரிகள் துார்வாரி சீரமைக்கும் பணி துவங்கி உள்ளதால், மகிழ்ச்சியாக உள்ளது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
- சி. உத்திரகுமார்
விவசாயி
எடையூர்
திருக்கழுக்குன்றம்.