ADDED : டிச 01, 2025 02:36 AM
மறைமலை நகர்: தனியார் ஆம்னி பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து செல்வன், 22, மறைமலை நகரில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை 6:00 மணிக்கு வேலை முடித்து விட்டு முத்து செல்வன், அவரது நண்பர்களான சுதாகர் பாரத் 23, மணிகண்டன், 23.ஆகியோருடன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
மறைமலை நகர் ரயில் நிலையம் எதிரே ஜி.எஸ்.டி., சாலையை கடக்க முயன்ற போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து மோதியது.
இதில் முத்து செல்வன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுதாகர் பாரத் படுகாயமடைந்தார். மணிகண்டன் சிறு காயங்களுடன் தப்பினார்.
சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் முத்து செல்வன் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

