ADDED : ஆக 20, 2025 02:21 AM
கூவத்துார்:கிணற்றில் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் உயிரிழந்தார்.
கூவத்துார் அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கன், சென்னையில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மூன்றாவது மகன் அர்ஜூன், 20; மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், கொடூர் கிராமத்தில் உள்ள பாட்டி ஜகதா வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று மதியம் 1:00 மணிக்கு நெல்வாய் பாளையம் செல்லும் சாலையோரத்தில் இருந்த கிணற்றில் எட்டிப்பார்த்தபோது, தவறி விழுந்தார். சாலையில் சென்றவர்கள் கூவத்துார் போலீசார் மற்றும் செய்யூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மூழ்கிய அர்ஜூனை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். கூவத்துார் போலீசார் உடலைக்கைப் பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.