/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரத்தில் திருட்டு குடிநீர் இணைப்புகள் "கட்'
/
பல்லாவரத்தில் திருட்டு குடிநீர் இணைப்புகள் "கட்'
ADDED : ஜூலை 13, 2011 11:05 PM
பல்லாவரம்: பல்லாவரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் மூலம் வழங்கப்பட்ட, 600 திருட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணியில், நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக, 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்லாவரம் நகராட்சியில், 42 வார்டுகள் உள்ளன. மொத்தம் 2 லட்சத்து 15 ஆயிரத்து 432 பேர் வசிக்கின்றனர்.
நகராட்சிக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாலாறு குடிநீரும், சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம், 2 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போதைய நிலையில், நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை, 12, 000.கவுன்சிலர்களுக்கு பணம் கொடுத்து திருட்டு இணைப்பு பெற்றவர்கள் எண்ணிக்கை, 600. தற்போது நகராட்சியில், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், திருட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்க, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதன் அடிப்படையில், 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, திருட்டு குடிநீர் இணைப்புகளை துண்டிக்கும் பணிகள் நேற்று துவங்கின.
இது குறித்து, நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறியதாவது:நகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற, 5, 000 ரூபாய் டெபாசிட் கட்டணம் செலுத்த வேண்டும். மாதம், 50.50 ரூபாய் குடிநீர் வரி செலுத்த வேண்டும். முறையற்ற இணைப்புகள் தற்போது துண்டிக்கப்படுகின்றன. ஒரு மாதத்திற்குள் அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படும். இந்த இணைப்புகளை முறைப்படுத்த, சம்பந்தப்பட்டவர்கள் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.அவர்களுக்கு இதுவரை முறையற்ற நிலையில் குடிநீர் பெற்று வந்ததற்கு, 5, 000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மொத்தம், 10ஆயிரம் ரூபாய் செலுத்தினால், குடிநீர் இணைப்பு முறைப்படுத்தப்படும்.இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.

