/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிப்படை வசதியில்லாத வாகன நிறுத்துமிடங்கள்
/
அடிப்படை வசதியில்லாத வாகன நிறுத்துமிடங்கள்
ADDED : ஜூலை 13, 2011 11:07 PM
சென்னை மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள, பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்களில் மேற்கூரை இல்லாததால், வாகனங்கள் அனைத்தும் வெட்டவெளியில் நிறுத்தப்படுகின்றன.
இதனால், வாகனங்கள் அனைத்தும் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்து, பழுதாகும் நிலை உள்ளது.சென்னை புறநகரான தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இருந்து, தினசரி பல்லாயிரக்கணக்கானோர் கல்வி, பணி நிமித்தமாக புறநகர் மின்சார ரயில் மூலம் சென்னைக்கு வந்து செல்கின்றனர்.இவ்வாறு வருபவர்கள் தங்களது பைக், சைக்கிள்களை ரயில் நிலையங்களில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்திச் செல்கின்றனர்.
பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம், புறநகர் ரயில் நிலையங்களில் வாகன நிறுத்துமிடங்களை வைத்துள்ளது.குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த வாகன நிறுத்துமிடங்களுக்கு டெண்டர் விடப்படுகிறது. டெண்டர் எடுத்தவர்கள், வாகனங்கள் நிறுத்த நிழற்குடை அமைத்து தரவேண்டும். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் சைக்கிளுக்கு நாளொன்றுக்கு 3 ரூபாய், மாத வாடகை 75 ரூபாய், பைக்கிற்கு 6 ரூபாய், மாத வாடகை 150 ரூபாய் வசூலிக்க வேண்டும். புறநகர் ரயில் நிலையங்களில் சைக்கிளுக்கு 2 ரூபாய், மாத கட்டணம் 50 ரூபாய், பைக்கிற்கு நாளொன்றுக்கு 4 ரூபாய், மாத வாடகை 100 ரூபாய் என ரயில்வே நிர்வாகம் கட்டணம் நிர்ணயித்துள்ளது.ஆனால், பெரும்பாலான வாகன நிறுத்துமிடங்களில் நிழற்குடை இருப்பதில்லை.
குறிப்பாக சென்ட்ரல், மூர்மார்கெட் வளாகம், எழும்பூர், தாம்பரம், திருவள்ளூர், மீஞ்சூர், ஆவடி போன்ற பயணிகள் அதிகம் வந்து செல்லும் ரயில் நிலையங்களில், நிழற்குடை இல்லை. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மட்டும், சிறிய அளவில் நிழற்குடை உள்ளது. இருப்பினும், இந்த நிழற்குடை போதுமானதாக இல்லை. அதனால், வாகனங்கள் அனைத்தும் வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்தும் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து ஆவடியைச் சேர்ந்த முருகன் என்பவர் கூறியதாவது: நான் பெசன்ட் நகரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். எனது பைக்கை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ஸ்டாண்டில் நிறுத்திச் செல்வேன். இங்குள்ள நிழற்குடையில் 50 வாகனங்கள் கூட நிறுத்த முடியாது. இதனால், மரத்தடி, வெட்ட வெளியில் டூவீலரை நிறுத்த வேண்டியுள்ளது. இதனால், எனது பைக் அடிக்கடி பழுதாகி விடுகிறது. சில நேரங்களில் பெட்ரோல் திருடு போகிறது. இது குறித்து வாகன நிறுத்துமிட காவலர்களிடம் கூறினாலும், அவர்கள் கண்டுகொள்வதில்லை. வேறு வழியில்லாமல் இவற்றை பொறுத்துக் கொண்டு, எனது பைக்கை நிறுத்திச் செல்கிறேன்.இவ்வாறு முருகன் கூறினார்.எழும்பூர் ரயில் நிலையம் உட்பட அனைத்து ரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களிலும், இதே நிலை தான்.
மேலும், பல ரயில் நிலையங்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் கூறுகின்றனர்.பொதுமக்களின் புகார்கள் குறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாகனங்கள் நிறுத்த டெண்டர் எடுத்தவர்கள் தான் நிழற்குடையை அமைக்க வேண்டும். இது குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். பல ரயில் நிலையங்களில் ஒப்பந்த காலம் முடிந்து, புதியவர்கள் வந்துள்ளனர். அவர்களிடமும், நிழற்குடை அமைக்க வலியுறுத்துகிறோம். வாகன நிறுத்துமிடத்தில் கட்டண பலகையில் குறிப்பிட்டுள்ள கட்டணத்தை செலுத்தினால் போதும்.கூடுதல் கட்டணம் கேட்டால் கொடுக்க வேண்டாம். மேலும், அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் அதிகாரிகள் அடிக்கடி சோதனை செய்வார்கள். தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

