/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுபாட்டிலுக்கு கூடுதலாக வசூலித்த ஊழியர்கள்... 'சஸ்பெண்ட்!':50 பேர் மீது 'டாஸ்மாக்' நிர்வாகம் நடவடிக்கை
/
மதுபாட்டிலுக்கு கூடுதலாக வசூலித்த ஊழியர்கள்... 'சஸ்பெண்ட்!':50 பேர் மீது 'டாஸ்மாக்' நிர்வாகம் நடவடிக்கை
மதுபாட்டிலுக்கு கூடுதலாக வசூலித்த ஊழியர்கள்... 'சஸ்பெண்ட்!':50 பேர் மீது 'டாஸ்மாக்' நிர்வாகம் நடவடிக்கை
மதுபாட்டிலுக்கு கூடுதலாக வசூலித்த ஊழியர்கள்... 'சஸ்பெண்ட்!':50 பேர் மீது 'டாஸ்மாக்' நிர்வாகம் நடவடிக்கை
ADDED : செப் 04, 2024 01:53 AM

சென்னை::சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயம் செய்த விலையை விட, ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு மேல் விலை வைத்து விற்ற, 50 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனம், 4,830 மதுக்கடைகளை நடத்துகிறது. அதில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில், 767 கடைகள் உள்ளன.
புகார்
மதுக்கடை ஊழியர்கள், மது வாங்க வருவோரிடம் இருந்து, மது வகைகளை அரசு நிர்ணயம் செய்திருக்கும் எம்.ஆர்.பி., என்ற அதிகபட்ச சில்லரை விலையில் விற்கப்பட வேண்டும். ஆனால், டாஸ்மாக் கடைகளில், குவாட்டருக்கு 10 ரூபாய் வீதம் கூடுதல் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்தன.
தவிர, மதுவில் தண்ணீர் கலந்து விற்பது, விரும்பி கேட்கும் மது வகைகயை தராதது உள்ளிட்ட முறைகேடுகளிலும், டாஸ்மாக் விற்பனை ஊழியர்கள் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள், பறக்கும் படையினர், மதுக்கடைகளில் ஆய்வு செய்யும்போது, இவ்வாறு கூடுதல் பணம் வசூலிப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் பிடிபட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக, மதுபான கிடங்குகள் மற்றும் விற்பனை குறைந்த கடைக்கு இடமாற்றம் செய்து தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
தொடர்ந்து வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, ஓராண்டுக்கு முன் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி, மதுக்கடைகளில் நடத்தப்படும் ஆய்வு நடவடிக்கைகள் மற்றும் தண்டனை வழங்கும் முறை மாற்றியமைக்கப்பட்டன.
குவாட்டருக்கு 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் பிடிபட்டால், அபராதம் வசூலிப்பதற்கு பதில், உடனடி பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், 'குடி'மகன்களிடம் இருந்து கூடுதல் பணத்தை கட்டாயப்படுத்தி வசூலிப்பது சற்று குறைந்திருந்தது.
தற்போது, கூடுதலாக வசூலிப்பது மீண்டும் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
உத்தரவு
எனவே, 'மதுக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அலட்சியம் காட்டினால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட மேலாளர்களை, டாஸ்மாக் நிர்வாகம் சமீபத்தில் எச்சரித்துள்ளது.
அதன்படி, கடைகளில் ஆய்வு முடுக்கிவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாக, டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், சென்னை மற்றும் புறநகரில் உள்ள மதுக்கடைகளில் பாட்டிலுக்கு, 10 ரூாய்க்கு மேல் விற்ற, 50 ஊழியர்கள் சிக்கினர்.
அவர்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து, உள் மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
முந்தைய காலங்களை போல் இல்லாமல், தற்போது மதுக்கடைகளுக்கான வாடகை, மின் கட்டணம் என, கடைகளில் ஏற்படக்கூடிய செலவுகளை, டாஸ்மாக் நிர்வாகமே செய்கிறது.
ஒரு கடையில் விற்பனையாளர் ஒருவர், கூடுதல் பணம் வசூலிப்பது கண்டறியப்பட்டால், மேற்பார்வையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
எனவே, கூடுதல் பணம் வசூலித்தால் மது வாங்க வருவோர் புகார் அளிக்க முன் வர வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் தமிழகம் முழுதும், 137 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.