/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெரிசல் பகுதிகளில் மாடுகளுக்கு தடை விதிக்க... வருகிறது சட்டம்! தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம்
/
நெரிசல் பகுதிகளில் மாடுகளுக்கு தடை விதிக்க... வருகிறது சட்டம்! தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம்
நெரிசல் பகுதிகளில் மாடுகளுக்கு தடை விதிக்க... வருகிறது சட்டம்! தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம்
நெரிசல் பகுதிகளில் மாடுகளுக்கு தடை விதிக்க... வருகிறது சட்டம்! தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கடிதம்
ADDED : ஜூன் 20, 2024 11:44 PM

சென்னையில் மாடுகள் முட்டி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் சுற்றித் திரிய தடை விதிப்பது குறித்து, தமிழக அரசுக்கு மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது. சட்ட வல்லுனர்களுடன் பேசி, விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, திருவொற்றியூர், கிராம தெரு, அம்சா தோட்டம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் மதுமதி, 33. இவர், சோமசுந்தரம் நகர் சந்திப்பில், கடந்த 16ம் தேதி மாலை நடந்து சென்ற போது, தறிகெட்டு ஓடி வந்த எருமை மாடு, அவரை முட்டித் துாக்கியது.
பின், 50 அடி துாரத்திற்கு, தரதரவென இழுத்துச் சென்றது. காப்பாற்ற வந்தவரையும் எருமை மாடு முட்டித் தள்ளியது. அருகில் இருந்தவர்களையும் முட்ட வந்ததால், அலறியடித்து ஓடினர்.
இந்த சம்பவத்தில், இருவருக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதேபோல் கடந்தாண்டு, திருவல்லிக்கேணி பகுதியில் முதியவர் ஒருவர், மாடு முட்டியதில் உயிரிழந்தார். அரும்பாக்கம் பகுதியில், பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு வந்த சிறுமியையும், மாடு முட்டியது.
ஆவடியில், வீட்டு வாசலில் நின்று குழந்தைக்கு உணவு ஊட்டிய பெண்ணை, மாடு முட்டியது. திருவல்லிக்கேணி டி.பி.தெருவில், கஸ்துாரி ரங்கன் என்பவரும் மாடு முட்டி காயமடைந்தார்.
சமீப நாட்களில் மாடு முட்டிய சம்பவத்தில் ஆறு பேர் பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள், சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடந்து வருகின்றன.
தொடர் சம்பவங்கள் நடந்து வந்தாலும், விலங்குகள் நல சட்டப்படி, மாடுகளை வளர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமே தவிர, கட்டுப்படுத்த முடியாது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மாடுகளை பிடித்து 5,000 ரூபாய், 10,000 ரூபாய் அபராதம் விதித்தாலும், அதன் உரிமையாளர்கள் மீண்டும் வழக்கம் போல் மாடுகளை சாலையில் திரிய விடுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசுக்கு மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்க்க, 2013ல் தடை விதிக்கப்பட்டது. பின், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டு உள்ளது. தற்போது, மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் உரிமையாளர்கள், மாடுகளை பராமரிப்பது இல்லை.
எனவே, மக்கள் கூட்டம் அதிமுள்ள இடம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதன்படி சந்தை பகுதிகள், கோவில்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கப்படும். அதையும் மீறி திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மாடுகள் வளர்ப்போர் தங்களுக்குச் சொந்தமான இடங்களில், கட்டாயம் குறிப்பிட்ட அளவு காலியிடம் வைத்திருப்பது அவசியம்.
அவ்வாறு இடம் வைத்துள்ள உரிமையாளர்கள் மட்டுமே மாடுகள் வளர்க்க அனுமதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -