/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கரை ஒதுங்கும் கடல் பாம்புகளால் மீனவர்கள் அச்சம்
/
கரை ஒதுங்கும் கடல் பாம்புகளால் மீனவர்கள் அச்சம்
ADDED : ஆக 15, 2024 12:50 AM

சென்னை:கடலோர பகுதிகளில் அதிக விஷமுள்ள கடல் பாம்புகள் கரை ஒதுங்குவதால், மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடலில், 13 வகை பாம்புகள் இருப்பதாக, ஆராய்ச்சிகள் வாயிலாக தெரியவருகிறது. இதில் குறிப்பிட்ட சில வகை பாம்புகள் அதிக விஷ தன்மையுடன் காணப்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, கரையில் இருந்து, 3 முதல் 5 கடல் மைல் தொலைவுக்குள் தான் பாம்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் பாம்புகள் தொல்லை அதிகமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த உய்யாலி குப்பத்தைச் சேர்ந்த மீனவர் ராமசாமி கூறியதாவது:
பொதுவாக கடலில் ஏற்படும் சில மாற்றங்கள் காரணமாக, ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கடல்நீர் வண்டல் கலந்து கருப்பாக காணப்படும். 'வண்டல் தட்டி' எனப்படும் இந்த மாற்றத்தின்போது நீருக்குள் ஏற்படும் இருட்டு காரணமாக, கடல் பாம்புகள் கரையோரப் பகுதிகளுக்கு வருகின்றன.
மீன்பிடி வலையில் சிக்கும் பாம்புகளை அப்புறப்படுத்தும்போது கடித்து விடுகின்றன. கடலில் இறங்கி சிறிய படகுகளை தள்ளும்போதும் பாம்புகள் கடித்து விடுகின்றன.
குறிப்பாக, உள்ளி கட்டுவிரியன் வகை பாம்புகள் தான் அடிக்கடி மீனவர்களைக் கடிக்கின்றன. கடி பட்ட மீனவர்கள் உடனடியாக மருத்துமனை சென்று விஷய முறிவு ஊசி போட்டுக் கொள்கின்றனர்.
இந்த பாம்பு கடித்தவுடன் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் மூச்சடைப்பு, நெஞ்சு வலி போன்ற பாதிப்புகள் உணரப்படுகின்றன. ஆனால், உயிரிழப்பு எதுவும் பதிவானதாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடல் பாம்புகள் வெளியில் வருவது தொடர்பாக பரவலாக தகவல்கள் வருகின்றன. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைக்க, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்கின்றன.
பாம்புகள் கரை ஒதுங்குவதை தடுக்க முடியாத நிலையில், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளைத்தான் ஆராய வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.