sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஒரே இ - மெயிலால் களமிறங்கிய போலீசார் சபாஷ் பி.எம்.ஓ., அம்பத்துாரில் நிலவிய நெரிசலுக்கு அதிரடி தீர்வு

/

ஒரே இ - மெயிலால் களமிறங்கிய போலீசார் சபாஷ் பி.எம்.ஓ., அம்பத்துாரில் நிலவிய நெரிசலுக்கு அதிரடி தீர்வு

ஒரே இ - மெயிலால் களமிறங்கிய போலீசார் சபாஷ் பி.எம்.ஓ., அம்பத்துாரில் நிலவிய நெரிசலுக்கு அதிரடி தீர்வு

ஒரே இ - மெயிலால் களமிறங்கிய போலீசார் சபாஷ் பி.எம்.ஓ., அம்பத்துாரில் நிலவிய நெரிசலுக்கு அதிரடி தீர்வு


ADDED : மே 23, 2024 12:01 AM

Google News

ADDED : மே 23, 2024 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அம்பத்துார் :அம்பத்துார் அடுத்த அயப்பாக்கம் பிரதான சாலையில், தீராத பிரச்னையாக இருந்த வாகன நெரிசலுக்கு, பி.எம்.ஓ., எனும் பிரதமர் அலுவலகத்தால் விடிவு கிடைத்துள்ளது. அச்சாலையில் ஆக்கிரமிப்பு ஏற்படாமல் இருக்க, போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். 20க்கும் அதிகமான தள்ளுவண்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. விதிமீறல் ஏற்படாமல் இருக்க, அயப்பாக்கம் சாலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என, போலீசார் தெரிவித்தனர்.

சென்னை --- திருத்தணி நெடுஞ்சாலை மற்றும் அம்பத்துார் -- திருவேற்காடு பகுதிகளை இணைப்பது அயப்பாக்கம் பிரதான சாலை. தினம், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் இவ்வழியே சென்று வருகின்றன.

இச்சாலையின் இருபுறமும் வணிக வளாகங்கள், மெக்கானிக், டீக்கடை உட்பட பல கடைகள் செயல்படுகின்றன. கடைகளுக்கு வருவோர், தங்களின் டூ - வீலர் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை, சாலையில் ஆங்காங்கே தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர்.

தவிர, கடைகளின் உரிமையாளர்கள் நடைபாதையை ஆக்கிரமித்து, தங்களது பொருட்களை வைப்பது, 'ராம்ப்' எனும் சாய்தளம் அமைப்பது உள்ளிட்ட அடாவடி செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இது போன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொது போக்குவரத்தான மாநகர பேருந்து சேவை, அவசர சேவை வாகனங்களான ஆம்புலன்ஸ், போலீஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் இடையூறு ஏற்பட்டது. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக, பாதசாரிகளுக்கான நடைபாதை ஆக்கிரமிப்பில் இருப்பதால், அவர்களும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இந்த பிரச்னைகளால் அவதிப்படும் அப்பகுதியினர், இது குறித்து அம்பத்துார், கொரட்டூர், அம்பத்துார் தொழிற்பேட்டை சட்டம் -- ஒழுங்கு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தனர்; அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை.

கமிஷனர் உத்தரவு


அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அயப்பாக்கம் சாலையில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விபத்து அபாயம் குறித்து, பிரதமர் அலுவலகத்திற்கு இ -- மெயிலில் புகார் அளித்தார்.

இப்பிரச்னை மீது நடவடிக்கை எடுக்க வேண்டி, தமிழக அரசின் பார்வைக்கு, பிரதமர் அலுவலகம் அப்புகாரை அனுப்பியது. அங்கிருந்து, சம்பந்தப்பட்ட ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றது.

கமிஷனர் சங்கர் உத்தரவின்படி உடனடியாக அங்கு சென்ற போக்குவரத்து போலீசார், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். மூன்று மணி நேர ஆய்வில், மொத்தமுள்ள 24 அடி அகல அயப்பாக்கம் பிரதான சாலையில், வாகன நிறுத்தம் மற்றும் ஆக்கிரமிப்பு மட்டும் 10 அடி அகலத்திற்கு இருந்துள்ளது.

குறிப்பாக, பிரச்னைக்கு உள்ளான டென்லப் மைதானம் அருகே இருந்து சுபாஷ் நகர் வரையிலான 1.5 கி.மீ., துாரத்திற்கு, சாலையோரம் வாகனங்களை நிறுத்தியது, மழைநீர் வடிகால் மீது தங்கள் கடைகளை விரிவுபடுத்தியிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, விபத்துக்கு காரணமாகும் சாய்தளம் அமைத்திருப்பது தெரிந்தது.

நோட்டீஸ்


இதையடுத்து, அங்கிருந்த வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், மெக்கானிக் கடைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்களிடம், போக்குவரத்து போலீசார் பேச்சு நடத்தினர். ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கினர். ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள, கடைக்காரர்கள் இரு நாட்கள் அனுமதி கேட்டனர்.

இதையடுத்து, அச்சாலையில் இருந்த 30க்கும் மேற்பட்ட வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மழைநீர் வடிகால் மீது ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த 20க்கும் அதிகமான தள்ளுவண்டிகளையும், சாலையோர கடைகளையும் அகற்றினர்.

சாலையில் இருந்து கடைகளுக்கு அமைத்திருந்த சாய்தளங்களை, உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என எச்சரித்து சென்றனர்.

பிரதமர் அலுவலகத்தில் புகார் செய்ததால் தான், பிரச்னை தீரும் என்ற நிலை உருவாகி உள்ளதாக, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

துணை போகும் அதிகாரிகள்

பிரதமர் அலுவலகத்தில் புகார் செய்த பின் தான், சாலை ஆக்கிரமிப்பிற்கு தீர்வு கிடைத்துள்ளது. ஒவ்வொரு பிரச்னைக்கும், முதல்வர் தனிப்பிரிவு, பிரதமர் அலுவலகம் என, புகார் செய்ய முடியுமா? அம்பத்துார் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலையிலும், அரசியல் கட்சினரின் ஆதரவுடன் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளே அதற்கு துணை போகின்றனர்.

- பி.ரமேஷ், 54, அம்பத்துார்

தொடர்ந்து கண்காணிப்பு

ஆவடி கமிஷனரகத்தில் இருந்து, அவசர நடவடிக்கையாக கவனிக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உடனடியாக,

அயப்பாக்கம் சாலைக்கு சென்றோம்; அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதிய ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

- பரந்தாமன்,

போக்குவரத்து இன்ஸ்பெக்டர், அம்பத்துார்

'யு டியூபர்' வாசன் கடைக்கு 'நோட்டீஸ்'

வாகன சாகசத்தில் ஈடுபட்டு, பல வழக்குகளை சந்தித்துள்ள 'யு டியூபர்' வாசனும், அவரது நண்பர் அஜீஸ் என்பவரும் சேர்ந்து, அயப்பாக்கம் சாலையில் 'டி.டி.எப்., பிட்ஷாப்' எனும், இருசக்கர வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.அதிக ஒலி எழுப்பி, மற்றவரின் கவனத்தை திசை திருப்பி, விபத்தை ஏற்படுத்தும், 'சைலன்சர்' தலைக்கவசம், ஜி.பி.எஸ்., கருவி, ரேஸிற்கு தேவையான உபகரணங்கள் உள்ளிட்ட, விலை உயர்ந்த பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை வாங்கிச் செல்ல, ஏராளமான இளைஞர்கள் தங்களது வாகனங்களுடன் இங்கு குவிவர்.இதுவும் போக்குவரத்திற்கு பெரும் பிரச்னையாக இருந்தது. இது குறித்தும், அப்புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அக்கடையில் போக்குவரத்து போலீசார் ஆய்வு நடத்தினர். அங்கு, நடைபாதையை ஆக்கிரமித்து 'ராம்ப்' எனும் சாய்தளம் கட்டியது தெரிந்தது. தவிர, விதிமீறி அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்சர் இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, அக்கடைக்கு போக்குவரத்து போலீசார் 'நோட்டீஸ்' வழங்கினர்.



எதனால் நெரிசல்?

விபத்து ஏற்படும் அபாயம் குறித்து, அயப்பாக்கம் ஆர்.பாஸ்கர், 55, கூறியதாவது:அயப்பாக்கம், சுற்று வட்டார பகுதி வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், அயப்பாக்கம் பிரதான சாலை, 15 ஆண்டுகளுக்கும் மேலாக விரிவாக்கம் செய்யப்படாமல் உள்ளது. அதில் உள்ள வணிக வளாகங்களுக்கு, வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் இல்லை. தவிர, அந்த சாலையில் மசூதி, சர்ச் அருகே, நான்கு 'டாஸ்மாக்' கடை மற்றும் மதுக்கூடங்கள் உள்ளன. அவற்றுக்கு வரும் 'குடி'மகன்களும், போக்குவரத்து விதிகளை மீறி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். அயப்பாக்கம் சாலையை, இன்றைய போக்குவரத்திற்கு ஏற்ப விரிவாக்கம் செய்து, குறிப்பிட்ட இடங்களில், சிக்னல் மற்றும் போக்குவரத்து போலீசாரை பணியில் அமர்த்த வேண்டும். இல்லாவிட்டால், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை, ஒரே நாளில் தீர்க்க முடியாது; அடிக்கடி விபத்து ஏற்படுவதையும் தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us