/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாடவீதி குறு மண்டபங்களால் அபாயம் முருகா...! சொல்லொண்ணா வேதனையில் பக்தர்கள்
/
மாடவீதி குறு மண்டபங்களால் அபாயம் முருகா...! சொல்லொண்ணா வேதனையில் பக்தர்கள்
மாடவீதி குறு மண்டபங்களால் அபாயம் முருகா...! சொல்லொண்ணா வேதனையில் பக்தர்கள்
மாடவீதி குறு மண்டபங்களால் அபாயம் முருகா...! சொல்லொண்ணா வேதனையில் பக்தர்கள்
ADDED : மார் 03, 2025 12:41 AM

வடபழனி முருகன் கோவிலை சுற்றிய தெருக்களில், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் கூட நுழைய முடியாத வகையில், அனுமதியின்றி செயல்படும் வரும் பல சிறு மண்டபங்களில், எதிர்பாராத விபத்து மற்றும் உயிர் இழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதங்கள் நடக்கும் முன், சி.எம்.டி.ஏ.,வும், சென்னை மாநகராட்சியும், கிடுக்கிப்பிடி நடவடிக்கையாக, திருமண மண்டபங்களை முறைப்படுத்த வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை வடபழனி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சில ஆண்டுகளாக, அறநிலையத்துறை சார்பில் புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் செய்யப்பட்டதால், பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இங்கு திருமணம் செய்தால், இல்வாழ்க்கை சிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், ஆண்டிற்கு 6,000 முதல் 7,000 திருமணங்கள் வரை நடக்கின்றன.
கோவில் நிர்வாக திருமண வழிகாட்டு நெறிமுறை பின்பற்ற தவறியோர், அனுமதி கிடைக்காதோரை, கோவில் மாடவீதிகளில் உள்ள சிறிய திருமண மண்டபங்கள் நடத்துவோர் குறி வைக்கின்றனர்.
மாடவீதிகளில் திருமணம் நடத்தினாலும், கோவிலில் திருமணம் நடத்தியதற்கு சமம் என, திருமண வீட்டாரை மூளை சலவை செய்து, 'பேக்கேஜ்' முறையில் திருமணத்தை நடத்தி வைத்து லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால், திருமண வைபவத்தை வியாபாரமாக்கி உள்ளனர்.
இதனால், 20 ஆண்டுகளில் மாடவீதிகள், கோவில் அருகில் உள்ள குடியிருப்புகள் பெரும்பாலும் சிறு, சிறு திருமண மண்டபங்களாக உருமாற்றப்பட்டன.
இதுகுறித்து சமூகநல விரும்பிகள் கூறியதாவது:
வடபழனி முருகன் கோவில் மாடவீதிகளில், புற்றீசல் போன்று, 30க்கும் மேற்பட்ட சிறிய திருமண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் பல, வணிக ரீதியாக அனுமதி பெறவில்லை. மின் இணைப்பும், வணிக இணைப்பாக இல்லாமல் வீட்டு இணைப்பாக உள்ளது.
சிறிய அரங்கில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் திணிக்கப்படுகின்றனர். கோவிலை சுற்றி, பல தெருக்கள் அகலம் மிகவும் குறைவு தான். அதில், திருமணத்திற்கு வருவோர் வாகனங்களை நிறத்தி விடுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகூர்த்த நாட்களில் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, இது போன்ற திருமண மண்டபங்களில் ஏதேனும் தீ விபத்தோ, கட்டட சரிவு போன்ற அசம்பாவிதம் நிகழ்ந்தாலோ, அதில் சிக்கும் மக்களை மீட்க ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட உள்ளே வர முடியாது. நிலைமை விபரீதமாகி விடும்.
இவ்வாறு கூறினர்.
இந்த மண்டபங்களுக்கு வருவோரின் வாகனங்கள், தெருக்களில் முறையற்று நிறுத்தப்படுகின்றன. இதனால், தெருக்களில் பக்தர்கள் கடும் சிரமப்பட்டு வந்து செல்கின்றனர்.
அவசர தேவைக்கு வாகனங்கள் வந்து செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த திருமண மண்டபங்களை வரன்முறைப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நான் வெண்டிங் ஜோன்
சென்னை மாநகராட்சியில், மக்கள், வாகனம் அதிகம் பயன்படுத்தும் சாலைகளில், நடைபாதைகளை ஆக்கிரமித்து, கடைகள் நடத்தக்கூடாது. அந்த சாலைகள், 'நான் வெண்டிங் ஜோன்' என்று அடையாளப்படுத்தப்பட்டு, விளம்பர பதாகைகள் வைக்கப்படுகின்றன.
அவ்வாறு அறிவிக்கப்பட்ட வடபழனி ஆண்டவர் தெரு சாலை முழுதும், ஆக்கிமிரமிப்பு கடைகள் புற்றீசலாக பெருகி வருகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
-- நமது நிருபர் --