/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கடை சுவரில் துளையிட்டு 10 சவரன் நகை 'ஆட்டை'
/
கடை சுவரில் துளையிட்டு 10 சவரன் நகை 'ஆட்டை'
ADDED : மே 11, 2024 12:11 AM

சேலையூர், சேலையூர் அருகே, நகைக்கடையின் பின்புற சுவரில் ஓட்டை போட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 10 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.
சேலையூரை அடுத்த கேம்ப் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ், 48. இவர், கேம்ப் ரோடு சந்திப்பு, அகரம்தென் பிரதான சாலையில், 'பரிஸ் ஜுவல்லரி' என்ற பெயரில், நகைக் கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில் கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை, 8:00 மணியளவில் கடையை திறந்த போது, வெள்ளி பொருட்கள் வைத்திருந்த அறையில் பொருட்கள் சிதறிக் கிடந்தன.
மேலும், 'லாக்கர்' அறையும் திறந்திருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மனோஜ், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கடையின் பின்பகுதியில் உள்ள சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், தனி அறையில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைக்கான லாக்கரை உடைக்க முயற்சித்துள்ளனர்.
பல மணி நேரம் முயன்றும், அந்த லாக்கரை உடைக்க முடியாததால், கடையில் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த, 10 சவரன் நகை, 20 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரிந்தது.
தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
தங்க நகை வைக்கப்பட்டிருந்த லாக்கரை உடைக்கும் முயற்சியில், அது சேதம் அடைந்துள்ளதால், உள்ளே இருந்த நகைகள் திருடு போனதா இல்லையா என்பது, லாக்கரை திறந்து பார்த்தால் மட்டுமே தெரியவரும் எனத் தெரிகிறது.
சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.