/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் 13 மணி நேர மின் தடை 2வது நாளாக பல இடங்களில் மக்கள் கொதிப்பு
/
செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் 13 மணி நேர மின் தடை 2வது நாளாக பல இடங்களில் மக்கள் கொதிப்பு
செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் 13 மணி நேர மின் தடை 2வது நாளாக பல இடங்களில் மக்கள் கொதிப்பு
செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் 13 மணி நேர மின் தடை 2வது நாளாக பல இடங்களில் மக்கள் கொதிப்பு
ADDED : ஜூன் 02, 2024 12:30 AM

வெயில் காலம் துவங்கிய நாள் முதலே, மின் வினியோகத்தில் பெரும் குளறுபடி நிலவி வருகிறது. அடிக்கடி தடைபடும் மின்சாரத்தில், வீட்டின் அன்றாட பணிகள் பாதிக்கின்றன; தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.
விடுமுறைக்கு வீட்டில் இருக்கும் சிறுவர்கள், புழுக்கம் காரணமாக தவிக்கின்றனர். தவிர, கைக்குழந்தைகள், முதியோர்கள் மற்றும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கின்றனர்.
இரு நாட்களுக்கு முன், சென்னையின் பல இடங்களில் இரவு நேரத்தில் மின் தடை ஏற்பட்டு, மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை, பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
எண்ணுார், நேரு நகர் முழுதும் மின் தடை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த மக்கள், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். மின் தடையால், இப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபடுவது இது இரண்டாவது முறையாகும்.
மணலி, துர்கா அவென்யூ, அவுரிக்கொல்லைமேடு, சின்னசேக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும், நள்ளிரவில் மின் தடை ஏற்பட்டது; இப்பிரச்னை தொடர்ச்சியாக உள்ளது.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் - திருவேற்காடு பிரதான சாலையில், எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் அபர்ணா நகர் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, திடீர் மின் தடை ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த பகுதிவாசிகள் 200க்கும் மேற்பட்டோர், மின் வாரிய அதிகாரிகளை கண்டித்து, அயப்பாக்கம் -- திருவேற்காடு சாலையில், மறியலில் ஈடுபட்டனர். தொடர் போராட்டம் காரணமாக, அதிகாலை 2:00 மணிக்கு சீரான மின்சாரம் வந்தது.
ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செக்டார் 1 மற்றும் ஆவடி தீயணைப்பு அலுவலக சாலையில் நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பகுதிவாசிகள், 100க்கும் மேற்பட்டோர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிலர், மின் வாரியத்திற்குள் புகுந்து 'போர்மேன்' உதவியுடன், அனைத்து மின் இணைப்புகளையும் துண்டித்தனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாலை 3:00 மணிக்கு மின்சாரம் சீரானது.
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை, 24 மணி நேரத்தில், 13 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. அதேபோல், வேளச்சேரி, தரமணி, நீலாங்கரை, திருவான்மியூரில் சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
திருவல்லிக்கேணி, நடுக்குப்பம் பகுதியில் ஒரு வாரமாக, நள்ளிரவிலும், அதிகாலையிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், இங்குள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
தொடர் மின் தடையால், சிறுவர் முதல் முதியோர் வரை, கடும் உஷ்ணத்தால் கடும் அவதி அடைகிறோம். குறிப்பாக, வேலைக்கு சென்று வீடு திரும்புவோர், நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியவில்லை.
மின் தடை குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிப்பதில்லை. இதனால், மின்சாரம் எப்போது வரும் என தெரியாமல்,பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
பள்ளிகள் திறக்க ஒரு வாரமே உள்ளது. அதற்குள் மின்வெட்டு பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் என, வளர்ந்து வரும் ஓ.எம்.ஆரில் மின் வினியோக பயன்பாடு அதிகரிக்கிறது.
மின் உற்பத்தி தாராளமாக கிடைத்தாலும், பகிர்வில் பல இடங்களில் பிரச்னை உள்ளது. மின்நுகர்வு தேவைக்கு ஏற்ப, அதிக திறன் உடைய புதிய மின்மாற்றிகள் அமைக்க வேண்டும். தேவைப்படும் இடங்களில், துணைமின் நிலையங்கள் அமைப்பதும் அவசியம்.
அதற்கு ஏற்ப திட்டமிட்டால் தான், சீரான மின்வினியோகம் வழங்க முடியும். வடிகால், கால்வாய் பணிகளால் நிலத்திற்கடியில் பதிக்கப்பட்ட மின் கேபிள்கள் பழுதடைந்தாலும் மின் தடை ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மின்மாற்றி தேவை
எர்ணாவூர், மாகாளியம்மன் கோவில் தெருவில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், குறைந்த மின் அழுத்தம் காரணமாக, அடிக்கடி மின் தடை மற்றும் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமாகி வருகின்றன. இப்பிரச்னையை தீர்க்க, கூடுதலாக மின்மாற்றிகள் பொருத்த கம்பங்கள் நடப்பட்டன. ஆனால், மூன்று மாதங்களாகியும், மின்மாற்றி பொருத்தவில்லை. இதன் காரணமாக, மின் தடை, குறைந்தழுத்த மின் பிரச்னை தொடர்கிறது.
கணபதி,
மாகாளியம்மன் கோவில் தெரு, எர்ணாவூர்.
60 குழுக்கள் அமைப்பு
சில தினங்களாக வெயில் கடுமையாக உள்ளதால், வீடுகளில், 'ஏசி' சாதனத்தின் பயன்பாடு இரவில் மட்டுமின்றி, நாள் முழுதும் உள்ளது. இதனால், நேற்று முன்தினம் சென்னை மின் நுகர்வு எப்போதும் இல்லாத வகையில், 10.17 கோடி யூனிட்களாக அதிகரித்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, மின் வினியோக மின்மாற்றி, கேபிள், மின் கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் பழுதால், சில இடங்களில் மின் தடை ஏற்படுகிறது. இது, உடனுக்குடன் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மின் தடை புகார்களை, 94987 94987 என்ற எண்ணில் தெரியப்படுத்தலாம். சென்னை மற்றும் புறநகரில் இரவு நேரத்தில், மின் சாதனங்களில் ஏற்படும் பழுதுகளை உடனே சரிசெய்ய, 60 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, பணியில் ஈடுபட்டு வருகின்றன.
மின் வாரிய அதிகாரிகள்
- நமது நிருபர் -