/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சடையங்குப்பம் மேம்பால பணி இழுவை திறப்புக்கு 14 ஆண்டாக காத்திருப்பு
/
சடையங்குப்பம் மேம்பால பணி இழுவை திறப்புக்கு 14 ஆண்டாக காத்திருப்பு
சடையங்குப்பம் மேம்பால பணி இழுவை திறப்புக்கு 14 ஆண்டாக காத்திருப்பு
சடையங்குப்பம் மேம்பால பணி இழுவை திறப்புக்கு 14 ஆண்டாக காத்திருப்பு
ADDED : மே 24, 2024 12:07 AM

மணலி,
மணலி மண்டலம் 16வது வார்டில், சடையங்குப்பம், பர்மா நகர் ஆகிய இரு கிராமங்கள் உள்ளன. 1,500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள இந்த கிராமங்களை சுற்றி, கொசஸ்தலை ஆறு, புழல் உபரி நீர் கால்வாய், பகிங்ஹாம் கால்வாய், புழல் உபரி கால்வாய் என, நீர் நிலைகள் மலைப்பாம்பு போல் சுற்றியுள்ளன.
அதுமட்டுமல்லாமல், சடையங்குப்பம் ஏரியும் ஊருக்குள் உள்ளது. பருவ மழைக்காலங்களில் வெள்ளத்தால் சடையங்குப்பம், பர்மா நகர் பாதிக்கப்படுவது வாடிக்கை.
குறிப்பாக, மக்கள் வெளியேற இருக்கும், சடையங்குப்பம் கட்டை பாலம், பர்மா நகர் இரும்பு பாலமும் மூழ்கி விடும்.
கடந்த 2-015, 2017, 2020, 2023 ஆகிய ஆண்டுகளில், வடகிழக்கு பருவமழை மற்றும் சூறாவளிகளால் கடும் சேதத்தை சடையங்குப்பம் மக்கள் சந்தித்தனர். உயிரை காப்பாற்றினால் போதும் என, பைபர் படகுகள் மூலம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இதற்கு தீர்வாக, சடையங்குப்பம் கிராமத்தில் இருந்து, மணலி விரைவு சாலை - ஜோதி நகர் சந்திப்பை இணைக்கும் வகையில், உயர்மட்ட மேம்பாலம் 16 கோடி ரூபாய் மதிப்பீடில் 2010ம் ஆண்டு துவக்கப்பட்டது.
நில ஆர்ஜிதம், நீதிமன்ற வழக்குகள் மற்றும் பருவமழை கால பிரச்னைகளால், உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் அவ்வப்போது தடைபட்டு வந்தன.
ஒருவழியாக, 14 ஆண்டுகளுக்குபின் மேம்பால கட்டுமான பணிகள், தார்ச்சாலை மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளன.
பிளம்பிங் பணிகள், தெருவிளக்குகள் அமைக்கும் பணி, வண்ணம் தீட்டும் பணிகள் பாக்கி உள்ளன. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், மேம்பாலம் திறப்பு நிகழ்ச்சி தள்ளிப்போகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, மேம்பாலப் பணிகளை முடித்து, திறப்பு விழா காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.