/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கச்சா எண்ணெய் கசிவால் எண்ணுாரில் 147 ஏக்கர் சதுப்பு நிலம் பாதிப்பு தீர்ப்பாயத்தில் வனத்துறை அறிக்கை
/
கச்சா எண்ணெய் கசிவால் எண்ணுாரில் 147 ஏக்கர் சதுப்பு நிலம் பாதிப்பு தீர்ப்பாயத்தில் வனத்துறை அறிக்கை
கச்சா எண்ணெய் கசிவால் எண்ணுாரில் 147 ஏக்கர் சதுப்பு நிலம் பாதிப்பு தீர்ப்பாயத்தில் வனத்துறை அறிக்கை
கச்சா எண்ணெய் கசிவால் எண்ணுாரில் 147 ஏக்கர் சதுப்பு நிலம் பாதிப்பு தீர்ப்பாயத்தில் வனத்துறை அறிக்கை
ADDED : ஏப் 04, 2024 12:21 AM
சென்னை, மழைநீரில் கச்சா எண்ணெய் கலந்ததால் எண்ணுார் சதுப்பு நிலத்தில், 147 ஏக்கர் பரப்பளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், தமிழக வனத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த 2023 டிச., 4ம் தேதி சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, மழைநீரில் கலந்த கச்சா எண்ணெய் கழிவு பகிங்ஹாம் கால்வாய், எண்ணுார் கடல் பகுதிக்கு பரவியது.
இதனால் மீனவர்கள், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதால், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. கச்சா எண்ணெய் கசிவுக்கு காரணமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க, தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
'கச்சா எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வது குறித்து கோவாவில் உள்ள தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இறுதி அறிக்கை, வரும் மே மாதம் கிடைக்கும்.
அதன்படி, எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட சதுப்பு நிலங்களை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் -சி.பி.சி.எல்., தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'சென்னை ஐ.ஐ.டி.,யின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, வரும் ஏப்ரல் இறுதிக்குள் வந்துவிடும்' என, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழக வனத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், 'கச்சா எண்ணெய் கசிவால் எண்ணுார் பகுதியில் 147 ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது. அதில் 49 ஏக்கர் சதுப்பு நிலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 5,000 தாவரங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகள் வெட்டப்பட்டன. அதன் கழிவுகள் 5,081 மூட்டைகள் அகற்றப்பட்டன.
சதுப்பு நிலத்தின் மேற்பகுதியில் படிந்திருந்த எண்ணெய் படலங்கள் அகற்றப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. சதுப்பு நிலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் முழுமையாக எப்போது சரி செய்யப்படும் என்பது குறித்து, வனத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
கோவாவில் உள்ள தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி., அறிக்கையின் அடிப்படையில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட சேதத்தின் அளவை, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் மதிப்பிட வேண்டும்.
வழக்கின் அடுத்த விசாரணை வரும் ஜூலை 1ம் தேதி நடக்கும்.
இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

