/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2,000 கிலோ குட்கா பறிமுதல் நான்கு பேர் கைது
/
2,000 கிலோ குட்கா பறிமுதல் நான்கு பேர் கைது
ADDED : மே 25, 2024 06:25 PM

டி.பி.,சத்திரம்:குன்றத்துார் பகுதியில் பதுக்கி வைத்து, சென்னை முழுதும் குட்கா போதை பொருட்கள் வினியோகம் செய்யப்படுவதாக, கிழக்கு மண்டல இணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் கார்டன் சாலையில் சென்ற, 'டாடா ஏசி' வாகனத்தை மடக்கி, டி.பி.,சத்திரம் போலீசார் சோதித்த போது, அதில், பண்டல் பண்டலாக குட்கா பாக்கெட்கள் இருந்தது தெரிந்தது.
விசாரணையில், பெங்களூரில் இருந்து குட்காவை கடத்தி வந்து, குன்றத்துாரில் பதுக்கி, அங்கிருந்து சென்னை முழுதும் கடைகளுக்கு வினியோகம் செய்தது தெரியவந்தது.
அவர்கள் கொடுத்த தகவலின்படி, குன்றத்துாரில் தனியார் தண்ணீர் கேன் கிடங்கில் இருந்து, 2,000 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், மாங்காடு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், 33, துாத்துக்குடியைச் சேர்ந்த அர்திஸ் வில்சன், 27, முத்துகுமார், 24, சிவா, 22, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இதில், பால்ராஜ் மற்றும் அர்திஸ் வில்சன் மீது வாலாஜாபேட்டையில் குட்கா வழக்கு உள்ளது.