/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
23,000 அமெரிக்க டாலர் மோசடி செய்தவருக்கு வலை
/
23,000 அமெரிக்க டாலர் மோசடி செய்தவருக்கு வலை
ADDED : ஏப் 25, 2024 12:47 AM
தேனாம்பேட்டை, சென்னையில் 23,000 அமெரிக்க டாலரை நுாதன முறையில் ஏமாற்றி திருடிச் சென்ற மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புரசைவாக்கம் பிரிக்கிளின் தெருவைச் சேர்ந்தவர் பிரதீக் வக்காரியா,38. இவர் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றித் தரும் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று இவரை தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், தனக்கு 23,000 அமெரிக்க டாலர் தேவை என்றும், அதற்கான இந்திய பணத்தை கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை நம்பிய பிரதீக் வக்காரியா, சென்னை தி.நகர் நரசிம்மன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்றார். அங்கு வந்தவரிடம், அமெரிக்க டாலரை கொடுத்தார்.
அவர், இந்திய பணத்தை கொண்டுவரும் வரை காத்திருக்கும்படி, பிரதீக் வக்காரியாவிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த மர்ம நபர் பணத்தைக் கொண்டு வரவில்லை.
சந்தேகமடைந்த பிரதீக் வக்காரியா, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டிற்குச் சென்று பார்த்த போது, அங்கு யாருமில்லை என தெரிந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரதீக் வக்காரியா, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மோசடி நபர் பேசிய மொபைல்போன் எண் 'சுவிட்ச் --ஆப்' ஆகி இருப்பதால், சைபர் கிரைம் போலீசார் உதவியோடு, மோசடி நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில், தேனாம்பேட்டை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

