/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடி, கும்மிடி தடத்தில் 4 ரயில் சேவை துவக்கம்
/
ஆவடி, கும்மிடி தடத்தில் 4 ரயில் சேவை துவக்கம்
ADDED : மார் 02, 2025 12:44 AM
சென்னை, 'சென்னை - ஆவடி, கும்மிடிப்பூண்டி தடத்தில், நாளை முதல் நான்கு புது மின்சார ரயில் சேவை துவங்கப்படும்' என, சென்னை ரயில் கோட்டம் அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், தினமும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.
ஆனாலும், 'பீக் ஹவர்' எனப்படும் அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், பயணியர் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
எனவே, கூடுதல் மின்சார ரயில்சேவை துவங்க வேண்டுமென பயணியர் கோரிக்கை விடுத்தனர். மேலும், பயணியர் நல சங்கங்கள் சார்பில், கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, நான்கு புதிய மின்சார ரயில் சேவை வரும் 3ம் தேதி முதல் துவங்க உள்ளது.
சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்ட்ரல் - ஆவடிக்கு காலை 11:15 மணிக்கும், ஆவடி - சென்ட்ரலுக்கு அதிகாலை 5:25 மணிக்கு நாளை முதல் புதிய மின்சார ரயில்கள் சேவை துவங்கப்படுகிறது
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10:35 மணிக்கும், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரலுக்கு காலை 9:10 மணிக்கும் புதிய மின்சார ரயில்கள் சேவை துவங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.