/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சண்டையை விலக்கியவரின் குடிசைக்கு தீ வைத்த கொடூரம்: 5 பேர் சிக்கினர்
/
சண்டையை விலக்கியவரின் குடிசைக்கு தீ வைத்த கொடூரம்: 5 பேர் சிக்கினர்
சண்டையை விலக்கியவரின் குடிசைக்கு தீ வைத்த கொடூரம்: 5 பேர் சிக்கினர்
சண்டையை விலக்கியவரின் குடிசைக்கு தீ வைத்த கொடூரம்: 5 பேர் சிக்கினர்
UPDATED : செப் 18, 2024 01:22 AM
ADDED : செப் 18, 2024 12:31 AM

அயனாவரம் : அயனாவரம், சோலை 3வது தெருவில் குடிநீர் வாரிய இடத்தில், 10க்கும் மேற்பட்டோர் குடிசை கட்டி வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பழைய குற்றவாளியான நிவாஸ், 25, சச்சின், 25, ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் தகராறு ஏற்பட்டு கைக்கலப்பானது.
சத்தம் கேட்டு, அதே பகுதியைச் சேர்ந்த அப்பு பிரசாத், 32, என்பவர், இருவரையும் விலக்கி விட்டார். அப்போது, நிவாஸுக்கும், அப்பு பிரசாத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த நிவாஸ், 'இன்று இரவு நீங்கள் எப்படி துாங்குகிறீர்கள்..? நான் பார்த்துக் கொள்கிறேன்' என, மிரட்டிச் சென்றுள்ளார்.
சில மணிநேரத்திற்குப் பின், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், நிவாஸ் அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அப்பு பிரசாத்தின் குடிசைக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். அயர்ந்து துாங்கிக் கொண்டிருந்த அப்புபிரசாத்தின் குடும்பத்தினர் அலறியடித்து வெளியில் ஓடிவந்தனர்.
மளமளவென பரவிய தீ, அடுத்தடுத்து நான்கு வீடுகளுக்கு பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அவற்றில் குடியிருந்தோரும் வெளியேறினர். வில்லிவாக்கம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேர போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், அப்பு பிரசாத், மாதவன், 41, மீனா, 45, சூசைராஜ், 60, இந்திரா, 55, ஆகியோரின் வீடுகள் தீக்கிரையாயின. வீட்டிலிருந்த சான்றுகள், உடைமைகள், மாணவர்களின் புத்தகங்கள் உள்ளிட்ட அனைத்தும் நாசமாயின.
இதுகுறித்து விசாரித்த அயனாவரம் போலீசார், நிவாஸ் மற்றும் அவரது கூட்டாளிகளான அதேபகுதியில் வசித்த சிலம்பரசன், 20, பிரின்ஸ், 25, நவின், 19, குஜ்ஜி தெருவைச் சேர்ந்த விஜயகுமார், 19, ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

