ADDED : மே 06, 2026 08:51 PM
ஸ்ரீபெரும்புதுார்: ஒரகடம் ‘சிப்காட்’டிற்கு சொந்தமான ஓ.எஸ்.ஆர்., நிலத்தில் கிடந்த குப்பைகளுக்கு மர்ம நபர்கள் வைத்த தீ, அங்கிருந்த 500 மரக்கன்றுகளுக்கு பரவி, தீயில் எரிந்து நாசமாகின.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா, 3,500 ஏக்கர் பரப்பளவு உடையது. இதில், 350 ஏக்கர் நிலம், ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டு இடம் உள்ளது.
வண்டலுார் – வாலாஜாபாத் சாலையோரம், ஒரடகம் ஐ.டி.ஐ., மையம் அருகே உள்ள இந்த நிலத்தில், புங்கன், நாவல் உள்ளிட்ட 1,000க்கும் மேற்பட்ட பலவிதமான மரங்களை நட்டு, சிப்காட் நிறுவனம் பராமரித்து வருகிறது.
மர்ம நபர்கள் சிலர், ஓ.எஸ்.ஆர்., நிலத்தில் காய்ந்து கிடக்கும் குப்பை, இலைகள் மற்றும் புற்களுக்கு, நேற்று முன்தினம் இரவு தீ வைத்தனர். வேகமாக பரவிய தீ, அருகில் இருந்த 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளுக்கும் பரவி, அனைத்து எரிந்து நாசமாகின.
‘சிப்காட்’ நிர்வாகம் ஓ.எஸ்.ஆர்., நிலங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
