/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் வீடு விற்பனை 53 சதவீதம் சரிவு
/
சென்னையில் வீடு விற்பனை 53 சதவீதம் சரிவு
ADDED : செப் 03, 2024 12:07 AM
சென்னை, சென்னையில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் வீடுகள் விற்பனை, இரண்டாவது காலாண்டில் 53 சதவீதம் குறைந்துள்ளதாக, இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' தெரிவித்துள்ளது.
கிரெடாய் அமைப்பு சார்பில், சென்னை பெருநகர் பகுதியில் வீடுகள் விற்பனை, குடியிருப்பு திட்டங்கள் பதிவு தொடர்பான சந்தை நிலவர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு மூன்று மாத காலத்திலும், வீடுகள் விற்பனை குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் காலாண்டு அறிக்கையை, கிரெடாய் அமைப்பு வெளியிடுகிறது.
அந்த வகையில், இந்தாண்டு ஏப்., மே, ஜூன் ஆகிய மாதங்களில் நடந்த ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:
நடப்பாண்டில் இரண்டாவது காலாண்டில், ரியல் எஸ்டேட் ஆணைய தகவல்கள் அடிப்படையில், தமிழகம் முழுதிலும் இருந்து புதிதாக 91 குடியிருப்பு திட்டங்கள் பதிவு செய்யப்பட்டன. இதே காலகட்டத்தில் கடந்தாண்டு 123 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டன.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் புதிய திட்டங்கள் வருகை 26 சதவீதம் குறைந்துள்ளது.
இதில், சென்னையில் மட்டும் 65 திட்டங்கள் பதிவாகின. கடந்தாண்டு இதே காலகட்டத்தில், 98 திட்டங்கள் பதிவு செய்யப்பட்டன.
சென்னையில் புதிய திட்டங்கள் வருகையில் 34 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. திட்டங்களின் பதிவில் சரிவு காணப்பட்டாலும், அதில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள வீடுகள் எண்ணிக்கை, தமிழக அளவில் 30 சதவீதமாகவும், சென்னையில் 37 சதவீதமாகவும் உயர்ந்துள்ளன.
வீடுகள் விற்பனையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 53 சதவீதம் சரிவு காணப்படுகிறது. கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில், 5,498 வீடுகள் விற்கப்பட்டன. தற்போது இது, 2,597 ஆக குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கிரெடாய் சென்னை பிரிவு தலைவர் முகமது அலி கூறியதாவது:
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், புதிய திட்டங்கள் பதிவு எண்ணிக்கை குறைந்திருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. வீடுகள் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சி அளித்தாலும், விற்பனை சரிவு, தற்போது ஏற்பட்டுள்ள சவாலை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் ஒருவித மந்த நிலை காணப்படுவதை, இந்த மாற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் காணப்படும் பிரச்னைகளை தீர்க்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.