/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
604 கி.மீ., துாரம் கடலில் நீந்தி சாதித்த மாற்றுத்திறனாளிகள்
/
604 கி.மீ., துாரம் கடலில் நீந்தி சாதித்த மாற்றுத்திறனாளிகள்
604 கி.மீ., துாரம் கடலில் நீந்தி சாதித்த மாற்றுத்திறனாளிகள்
604 கி.மீ., துாரம் கடலில் நீந்தி சாதித்த மாற்றுத்திறனாளிகள்
ADDED : ஆக 16, 2024 12:29 AM

சென்னை, பார்வைத்திறன், நடக்கும் திறன், சிந்திக்கும் திறன் அற்ற, 15 மாற்றுத்திறனாளி சிறப்பு குழந்தைகள் இணைந்து, ராமேஸ்வரத்தின் மண்டபம் கடற்கரையில் இருந்து, சென்னை மெரினா கடற்கரை வரை நீந்தும் முயற்சியை மேற்கொண்டனர்.
இதற்கான அனுமதியை, பெற்றோரும், நீச்சல் பயிற்சியாளர்களும் கடலோர காவல் படையிடமும், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடமும் பெற்றனர்.
அதைத்தொடர்ந்து, பயிற்சியாளர்கள், சென்னையின் மெரினா, கோவளம் உட்பட தமிழகத்தின் பல்வேறு கடற்கரைகளில் நீந்தும் பயிற்சியை அளித்தனர். அதன் கண்காணிப்பாளராக பயிற்சியாளர் லோகநாதன் நியமிக்கப்பட்டார். சாதனையை ஒருங்கிணைக்கும் பணியை, வேவ் ரைடர்ஸ் குழு ஏற்றது.
இந்நிலையில், தினமும் 12 மணி நேரம் அஞ்சல் என்ற ரிலே முறையில் நீந்த, கடலோர காவல்படை அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த 5ம் தேதி காலை 6:00 மணிக்கு, ஒரு மாணவர் நீந்தத் துவங்கினார்.
அவரை தொடர்ந்து மற்ற மாணவர்கள் படகில் சென்றனர். முதல் மாணவர் முடிக்கும் இடத்தில் இருந்து, இன்னொருவர் நீந்தத் துவங்கினார்.
இப்படியே தினமும் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை நீந்தினர். முடிக்கும் ஊரில், இரவில் தங்கிய பின், மறுநாள் காலையும், இவ்வாறான நீச்சல் தொடர்ந்தது.
இந்த முயற்சி நேற்று மாலை 4:00 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையின் கண்ணகி சிலை பின்புறம் முடிவடைந்தது.
இது, உலக சாதனையாக, 'வேர்ல்ட் ரெக்கார்டு யூனியன்' புத்தகத்தில் இடம் பெற்றது. சாதனை படைத்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து, பார்வையற்ற மாணவர் லக்சய்குமாரின் தாய் முத்து பெரியநாயகி கூறியதாவது:
என் மகன், எட்டு மாதத்தில் பிறந்தார். அவருக்கு பார்வை மற்றும் அறிவுசார் குறைபாடு உள்ளது, மூன்று மாதங்களுக்கு பிறகே தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு பல்வேறு பயிற்சிகளை அளித்தோம். பின், நீர் விளையாட்டில் ஆர்வம் உள்ளதை அறிந்து, நீச்சல் பயிற்சி அளித்தோம்.
நீச்சல் குளத்தில், எதிரில் நின்று சத்தமிட்டு வழிகாட்டுவோம்.
ஆனால், கடலில் நீந்தும் போது வழிகாட்டுவது சவாலாக இருந்தது. அதை, பயிற்சியாளர்கள் திறம்பட செய்து, தற்போது சாதனையாளராக்கி உள்ளனர். நீச்சல் பழகிய பின், தன்னை தானே கவனித்துக் கொள்வதற்கும், தன்னம்பிக்கையுடன் வாழவும் பழகி விட்டார். தற்போது, உலக சாதனையும் படைத்து விட்டார்.
ஒரு தாயாக, மிகவும் மகிழ்ச்சியான நாளாக இது அமைந்து விட்டது. அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளும், கடலில் மட்டுமல்ல, வாழ்விலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றியடைவர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.