/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு புழுதிவாக்கத்தில் உள்வாங்கிய சாலை
/
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு புழுதிவாக்கத்தில் உள்வாங்கிய சாலை
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு புழுதிவாக்கத்தில் உள்வாங்கிய சாலை
பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு புழுதிவாக்கத்தில் உள்வாங்கிய சாலை
ADDED : ஜூலை 25, 2024 01:09 AM

புழுதிவாக்கம், உள்ளகரம் - புழுதிவாக்கம் நகராட்சியாக இருந்தபோது, ஜவஹர்லால் நேரு நகர்ப்புற சீரமைப்பு திட்டத்தின் கீழ், 2009ல் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்களுக்கான பணிகள் துவங்கின. 10 ஆண்டுகளுக்கு பின், திட்டப்பணிகள் முழுமை பெற்று இணைப்பு வழங்கப்பட்டது.
இதில், புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பிற்கான பிரதான குழாய், ராமலிங்கா நகர் பிரதான சாலையில், 1.2 கி.மீ., துாரத்திற்கு, 27 அடி ஆழத்தில் உள்ளது.
சதாசிவம் நகர், ராமலிங்கா நகர், ராம் நகர் உள்ளிட்ட பகுதி கழிவுநீர், இந்த பிரதான குழாய் வழியாக கழிவு நீரேற்று நிலையம் சென்று, அங்கிருந்து பெருங்குடிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
போக்குவரத்து நிறைந்த இச்சாலையில் மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியைச் சேர்ந்தோர், பரங்கிமலை - வேளச்சேரி சாலை, ஆதம்பாக்கம் அடைய இந்த சாலையை அதிகம் பயன்படுத்துவர்.
சில நாட்களுக்கு முன் பிரதான குழாயில் உடைப்பு, அடைப்பு ஏற்பட்டது. இதனால், சில தெருக்களில் கழிவுநீர் வெளியேறாமல் இருந்தது.
இதை சீரமைக்க, குடிநீர் வாரியத்தின் சார்பில் மாநகராட்சி அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், அச்சாலையில் கனரக லாரி ஒன்று, நேற்று சென்றபோது, திடீரென சாலை உள்வாங்கியது.
3 அடி நீளத்திற்கும், ஒன்றரை அடி அகலத்திற்கும் பள்ளம் ஏற்பட்டு, அதன் ஆழம் அதிகமாக உள்ளது.
தகவலறிந்த குடிநீர் வாரியத்தினர் சாலையை அடைத்து பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தினர்.
இதனால், அச்சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, கழிவுநீர் நீரேற்று நிலையம் செல்ல, தற்காலிகக் குழாய் அமைத்து நீரேற்று இயந்திரம் வாயிலாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த குழாய் உடைப்பு சீரமைக்க, பல நாட்கள் ஆகும் என தெரிய வருகிறது.