/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெட்ரோல் திருடி விற்கும் 6 பேர் கும்பல் சிக்கியது
/
பெட்ரோல் திருடி விற்கும் 6 பேர் கும்பல் சிக்கியது
ADDED : ஜூலை 01, 2024 01:41 AM

மாதவரம்:மாதவரம் அடுத்த மாத்துார், டெலிகாம் நகரில், சென்னை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்குள்ள திறந்தவெளி கிடங்கில் டேங்கர் லாரியில் இருந்து சிலர் பேரலில் பெட்ரோல் நிரப்பி கொண்டிருந்தனர். சந்தேகமடைந்த போலீசார், அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
இதில், பிடிபட்டவர்கள் டேங்கர் லாரிகளில் இருந்து பெட்ரோல் திருடி கள்ளச்சந்தையில் விற்கும், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன், 50, வேலாயுதம், 38, விஜயகுமார், 29, மற்றும் லாரி ஊழியர்கள் சிவா, 34, ராஜ்குமார், 38, கந்தன், 35, ஆகியோர் என்பது தெரிய வந்தது.
மேலும், சென்னை எண்ணுாரில் இருந்து கல்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு எடுத்து செல்லப்பட இருந்த பெட்ரோலை, லாரி டிரைவர் உதவியுடன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16,400 லிட்டர் பெட்ரோல், டேங்கர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.