/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறுவன் கடத்தல் மர்ம நபர்கள் இருவருக்கு வலை
/
சிறுவன் கடத்தல் மர்ம நபர்கள் இருவருக்கு வலை
ADDED : நவ 07, 2024 12:25 AM
சென்னை,
மாலை நேர டியூஷன் முடிந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த, 9 வயது சிறுவனை, இரண்டு மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். உறவினர் சத்தம்போட்டதால் சிறுவனை விட்டுவிட்டு தப்பினர்.
புரசைவாக்கம், தானா தெருவைச் சேர்ந்தவர் மோகனா, 31; கீழ்ப்பாக்கத்தில் உள்ள வந்தனா கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் சரவணன், 33; சென்ட்ரிங் தொழிலாளி. இவர்களுக்கு ரிஷி பிரகாஷ், 9 என்ற மகனும், ஹேம ஸ்ரீ என்ற மகளும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு, மாலை நேர டியூஷன் முடிந்து ரிஷிபிரகாஷ், வடமலை தெரு வழியாக, வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சிறுவனின் வாயை மூடி கடத்திச் சென்று கொண்டிருந்தனர்.
பட்டாளம் மார்க்கெட் அருகே சென்றபோது, சிறுவனின் அத்தை முறையான நித்யா என்பவர் பார்த்து, சத்தம் போட்டுள்ளார்.
இதனால் உஷாரான கடத்தல்காரர்கள், சற்று துாரத்திலேயே வாகனத்தை நிறுத்தி, சிறுவனை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர். உடனே நித்யா, சிறுவனை மீட்டு அவரது பெற்றோருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்தார்.
சிறுவனின் பெற்றோர், வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிந்த போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.