ADDED : செப் 02, 2024 02:20 AM

கீழ்ப்பாக்கம்:கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
போக்குவரத்து போலீசார் சார்பில், சென்னையை விபத்தில்லா நகரமாக்கும் நோக்கில், பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், பிரதான சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். சாலை மோசமான நிலையில் இருப்பதும், வாகன விபத்திற்கு ஒரு காரணமாக உள்ளது.
குறிப்பாக, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், கீழ்ப்பாக்கம் - பிராட்வே செல்லும் சாலையில், தனியார் 'ஸ்கேன் சென்டர்' அருகில், சாலையின் நடுவே பெரிய அளவில் பள்ளம் உள்ளது.
பச்சையப்பன் கல்லுாரி சிக்னலில் இருந்து, 50 மீட்டர் துாரத்தில் இந்த பள்ளம் இருப்பதால், சிக்னலை கடந்து வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கீழே விழுந்து, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
பள்ளத்தில் ஏற்கனவே பலமுறை 'பேட்ச் ஒர்க்' எனப்படும் ஒட்டுப் பணி செய்யப்பட்டது போல் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையின் பராமரிப்பில் உள்ள இச்சாலையை, துறை ரீதியாகவோ அல்லது போக்குவரத்து போலீசாரோ சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.