/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பிஸ்கட்' போட்ட சிறுவனை கடித்து குதறிய தெருநாய்
/
'பிஸ்கட்' போட்ட சிறுவனை கடித்து குதறிய தெருநாய்
ADDED : ஜூன் 19, 2024 12:17 AM

மயிலாப்பூர், வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், பிஸ்கட் போட்ட போது தெருநாய் கடித்து குதறியது.
மயிலாப்பூர், நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த சாயீஸ்வரன் என்ற 6 வயது சிறுவன், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியில் சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது அங்கிருந்த தெரு நாய்க்கு பிஸ்கட் போட்டுள்ளனர். திடீரென அந்த நாய் சிறுவர்கள் மீது பாயந்தது.
சிறுவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில், சாயீஸ்வரனை நாய் கடித்து குதறியது. சிறுவனின் முகம், தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த சிறுவன், எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். சிறுவன் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சம்பவம் குறித்து, மெரினா போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது:
மெரினா, திருவல்லிக்கேணி பகுதியில், நாய்கள் மற்றும் மாடுகள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் முதியோர் வரை, பலர் பாதிக்கப்படுகின்றனர்.
சிறுவனை கடித்து குதறிய நாய், அதன் பிறகும் தெருவில் சுற்றிக் கொண்டுதான் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நிரந்த தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நேற்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சந்தித்து நலம் விசாரித்தார்.
பின், அவர் கூறியதாவது:
சிறுவன் நாய்க்கு பிஸ்கெட் கொடுத்தபோது நாய் கடித்துள்ளது. தடுப்பூசி போட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. நலமாக உள்ளார். தெருநாய்களுக்கு உணவு வழங்கும்போது, குழந்தைகளை தனியாக விடக்கூடாது.
கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி போட்டபின், பிடித்த இடத்திலே நாயை விட வேண்டும் என, சட்டவிதியை பின்பற்ற வேண்டி உள்ளது. சென்னையில், 2018ல் தெருநாய் கணக்கெடுப்பு நடந்தது. அதன்பின், இப்போது நடக்கிறது. இரண்டு மாதத்தில் கணக்கெடுப்பு பணி முடியும்.
இதுவரை, 5,000க்கும் மேற்பட்ட செல்ல பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உள்ளது. வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கான உரிமத்தை, 50 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.
மாடு வளர்ப்போர், உணவு வழங்கவும் தங்க வைக்கவும் தனியாக இடம் ஒதுக்க வேண்டும். வெளியில் தனியாக விடும்போது, உரிமையாளர்கள் உடன் செல்ல வேண்டும்.
தனியாக விட்டால் முதல் முறை 5,000 ரூபாயும், இரண்டாவது முறை 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மாநகராட்சி நிதிநிலை அறிவிப்பின்படி, விரைவில் மாட்டு தொழுவம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.