/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ம.க.,வுக்கு ஒரே ஓட்டு கட்சியினர் அதிர்ச்சி
/
பா.ம.க.,வுக்கு ஒரே ஓட்டு கட்சியினர் அதிர்ச்சி
ADDED : ஜூன் 06, 2024 12:21 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் லோக்சபா தேர்தலில் தி.மு.க., வேட்பாளர் செல்வம் 5.86 லட்சம் ஓட்டுகள் பெற்று, இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
அ.தி.மு.க., வேட்பாளர் ராஜசேகர் 3.64 லட்சம் ஓட்டுகள் பெற்று இரண்டாவது இடத்தையும், பா.ம.க., வேட்பாளர் ஜோதி 1.64 லட்சம் ஓட்டுகள் பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டசபை தொகுதிகளிலும் உள்ள, 1,932 ஒட்டுச்சாவடிகளில், அதிகபட்சமாக மூன்று இலக்க ஓட்டுகள் பெற்ற பா.ம.க., வேட்பாளர் ஜோதி, உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, 122வது ஓட்டுச்சாவடியில், ஒரே ஒரு ஓட்டு மட்டுமே பெற்றுள்ளார். இது பா.ம.க.,வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரமேரூர் சட்டசபை தொகுதியில், இந்த ஓட்டுச்சாவடி வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட ஆர்.சி.எம்., உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ளது. இப்பகுதியில், தலித் மக்கள் அதிகம் வசிப்பதால், அ.தி.மு.க., - தி.மு.க,வினருக்கு அதிகபட்சமாக ஓட்டளித்துள்ளனர்.
இந்த, 122வது ஓட்டுச்சாவடியில், 457 ஆண் வாக்காளர்கள், 607 பெண்கள் என, 1,064 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தலில், 802 பேர் ஓட்டளித்துள்ளனர்.
தி.மு.க., வுக்கு, 520 பேரும், அ.தி.மு.க.,வுக்கு 219 பேரும், நாம் தமிழர் கட்சிக்கு 54 பேரும், பா.ம.க.,வுக்கு ஒருவரும் ஓட்டளித்திருப்பது தெரியவந்துள்ளது.