ADDED : ஆக 13, 2024 01:02 AM

பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலத்தில், அடிப்படை பணிகளில் மெத்தனம் காட்டும், மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தாம்பரம் மாநகராட்சி, 2வது மண்டலத்தில், பல்லாவரம் மற்றும் கீழ்க்கட்டளை அம்மா உணவகங்களில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக அ.தி.மு.க., குற்றம்சாட்டியது.
மேலும், பூங்காக்களை முறையாக பராமரிக்காதது, கீழ்க்கட்டளை மற்றும் ஜமீன் ராயப்பேட்டை ஏரிகளில் கழிவு நீர் கலக்கப்படுவது குறித்தும் புகார் எழுப்பியது. முன்னாள் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மூடி மறைப்பதாகவும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இப்பிரச்னைகளை முன்வைத்து, அ.தி.மு.க., சார்பில், பல்லாவரம் ரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் பென்ஜமின், சின்னையா, மாவட்ட செயலர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., தன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மக்கள் பணியில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

