/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எண்ணுாரில் கலக்கும் 'மஞ்சளாறு': தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு
/
எண்ணுாரில் கலக்கும் 'மஞ்சளாறு': தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு
எண்ணுாரில் கலக்கும் 'மஞ்சளாறு': தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு
எண்ணுாரில் கலக்கும் 'மஞ்சளாறு': தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாக குற்றச்சாட்டு
UPDATED : ஜூலை 03, 2024 07:08 AM
ADDED : ஜூலை 03, 2024 12:18 AM

எண்ணுார், திருவொற்றியூர் மண்டலம், எண்ணுாரில், உலகநாதபுரம், சத்தியவாணி முத்து நகர், எண்ணுார் குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், முகத்துவார குப்பம் உட்பட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், 15,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இவர்கள் தங்களது 'பைபர்' படகுகளை, தாழங்குப்பம் ஒட்டிய கடற்கரையில் நிறுத்தி, முகத்துவாரம் வழியாகச் சென்று, ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
நான்காவது முறை
இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தான் இறால், மீன், நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக இருக்கும்.
இந்த நிலையில் நேற்று பகிங்ஹாம் கால்வாயில் இருந்து, கொசஸ்தலை ஆறு இணையும் எண்ணுார் கழிமுகப் பகுதியில், தண்ணீருடன் மஞ்சள் நிறத்தில் கழிவுகள் ஆற்றில் கலந்து, தண்ணீரில் படர்ந்து காணப்பட்டது.
இந்தாண்டு மட்டும், முகத்துவாரம் பகுதி நான்காவது முறையாக மஞ்சள் நிறமாக மாறுவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:
எண்ணுார் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெருகி வரும் தொழிற்சாலைகள், தங்கள் நிறுவன கழிவுகளை சுத்திகரிக்காமல், அப்படியே முகத்துவாரம் வழியா கடலில் கலக்க செய்வதால், மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது.
இதனால், பல வேளைகளில் கழிமுகம் மற்றும் முகத்துவார பகுதியில், ரசாயனம் மற்றும் ஆயில் கழிவுகளால், மீன்கள் இறந்து மிதப்பது வாடிக்கையாக உள்ளது.
ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனித்து, கழிவுகளை சுத்திகரிக்காமல் ஆற்றில் கலக்க செய்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கொதிநீர் பாதிப்பு
மற்றொரு புறம், வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து கடலுக்குள் வெளியேற்றப்படும் சுடுநீரால், கடல் உயிர்கள் அழியும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாகவும் மீனவர்கள் குற்றம்சாட்டிஉள்ளனர்.
மீனவ மக்கள் கூறியதாவது:
பகிங்ஹாம் கால்வாய் வழியாக வெளியேறும் நீரும், எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கும். வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுடுநீர், நேரடியாக முகத்துவாரத்தில் கலக்க செய்வதால், கடல் வாழ் உயிர்கள் வாழ தகுதியற்ற இடமாக முகத்துவாரம் மாறி வருகிறது.
ஏற்கனவே, அனல் மின் நிலைய இரு அலகுகளில் இருந்து சுடு நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவதாக புதிய பிரிவு துவக்கப்பட்டிருப்பதால், வெளியேறும் சுடுநீரின் அளவும் அதிகமாக உள்ளது.
அதிகளவில் வெளியேறும் சுடுநீரால், முகத்துவாரத்தை நோக்கி இனப்பெருக்கத்திற்காக வரும் கடல் வாழ் உயிரினங்கள், உயிரிழக்க நேரிடுகிறது.
உடனடியாக, மீன்வளத்துறை அதிகாரிகள் கவனித்து, இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும். இல்லாவிடில், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
எண்ணுார் கொசஸ்தலை ஆற்றுநீர் மஞ்சள் நிறமாக காட்சியளிப்பது குறித்து ஏற்கனவே தகவல் பெறப்பட்டது. அதன் அடிப்படையில், முகத்துவார தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. இது, ஒரு இயற்கையான நிகழ்வு. இதனால் மீனவளம் பாதிக்கப்படவில்லை. ஆற்றில் தண்ணீர் குறையும்போது, தரை பகுதி திட்டுகள் தெரிவதால், இதுபோன்று மஞ்சள் நிறமாகக் காட்சியளிப்பது வழக்கம்.
- மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி