/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதியோரின் நல்வாழ்விற்காக ஆம்புலன்ஸ் வழங்கிய 'அதுல்யா'
/
முதியோரின் நல்வாழ்விற்காக ஆம்புலன்ஸ் வழங்கிய 'அதுல்யா'
முதியோரின் நல்வாழ்விற்காக ஆம்புலன்ஸ் வழங்கிய 'அதுல்யா'
முதியோரின் நல்வாழ்விற்காக ஆம்புலன்ஸ் வழங்கிய 'அதுல்யா'
ADDED : ஆக 22, 2024 12:37 AM

சென்னை, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட மற்றும் கவனிப்பாரற்ற முதியோருக்கு, ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் தொடர்பான சேவைகளை வழங்குவதே, 'காவல் கரங்கள்' திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்திற்காக, அனைத்து வசதிகளையும் கொண்ட, ஒரு அவசரநிலை சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வாகனத்தை அதுல்யா சீனியர் கேர் நிறுவனம், காவல் துறை கமிஷனர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நேற்று வழங்கியது. இதை கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
காவல் கரங்கள் செயல்திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில், ஆதரவற்ற முதியோருக்கு உடனடி மருத்துவ கவனிப்பை வழங்கி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வரை, பயணத்தின் போதே தேவையான மருத்துவ நடவடிக்கைக்கு உதவும் வகையில், இந்த ஆம்புலன்ஸ் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதுல்யா சீனியர் கேர் நிறுவனர் ஜி.சீனிவாசன் கூறுகையில், ''நம் மூத்த குடிமக்களின் வாழ்க்கை தரத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், காவல் கரங்கள் திட்டத்தோடு கைகோர்த்து செயல்படுவது மகிழ்ச்சி. எங்களின் சேவையை மேலும் விரிவுப்படுத்த, இந்த ஒத்துழைப்பு எங்களுக்கு உதவும். இந்த ஆம்புலன்ஸ் வண்டியை வழங்குவதை நாங்கள் கவுரவமாக கருதுகிறோம்,'' என்றார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர் பேசுகையில், ''காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக, 7,133 ஆதரவற்றவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 4,965 பேர் காப்பகத்திலும், 1,104 பேர் அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 793 பேர் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' என்றார்.