/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இன்டர்வியூ'வுக்கு வந்த பெண்ணை கடத்தி அத்துமீறிய ஆட்டோ ஓட்டுனர்
/
'இன்டர்வியூ'வுக்கு வந்த பெண்ணை கடத்தி அத்துமீறிய ஆட்டோ ஓட்டுனர்
'இன்டர்வியூ'வுக்கு வந்த பெண்ணை கடத்தி அத்துமீறிய ஆட்டோ ஓட்டுனர்
'இன்டர்வியூ'வுக்கு வந்த பெண்ணை கடத்தி அத்துமீறிய ஆட்டோ ஓட்டுனர்
UPDATED : மே 21, 2024 01:52 PM
ADDED : மே 21, 2024 04:25 AM

சென்னை: கர்நாடகாவில் இருந்து நேர்முகத் தேர்விற்காக சென்னை வந்த இளம்பெண்ணை, ஆட்டோவில் வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற டிரைவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் நேர்முகத் தேர்விற்காக ரயில் வாயிலாக நேற்று முன்தினம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார்.
தள்ளி விட்டார்
பின், நிலையத்திற்கு வெளியே உள்ள ஆட்டோ நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அங்கு நின்றிருந்த, புழல் அடுத்த லட்சுமிபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார், 32, என்பவரிடம், 'கோயம்பேடு செல்ல வேண்டும். சென்னை எனக்கு புதிது; அதனால், தங்குவதற்கு பாதுகாப்பான மகளிர் விடுதியை காட்டுங்கள்' என கேட்டுள்ளார்.
இதையடுத்து, சசிகுமார் ஒரு விடுதியை காண்பித்துள்ளார். ஆனால், சுகாதாரம் காரணமாக வேறு விடுதி பார்க்கலாம் என அப்பெண் தெரிவித்துஉள்ளார்.
இந்நிலையில் ஆட்டோ டிரைவர் சசிகுமார், 'இங்கு நல்ல விடுதி ஏதும் இல்லை. கொளத்துார் அருகே நல்ல விடுதி உள்ளது' எனக் கூறி, லட்சுமிபுரத்தில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
'சிறிது நேரம் இங்கு இருங்கள்; நான் சென்று அருகில் உள்ள விடுதியில் அறை இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்' எனக்கூறி வெளியே சென்றிருக்கிறார்.
சில நிமிடத்திற்கு பின், மீண்டும் வீட்டிற்கு வந்த சசிகுமார், 'மாலையில் தான் அறை காலியாகிறது; அதுவரை இங்கேயே ஓய்வெடுங்கள்' எனக் கூறியிருக்கிறார்.
ஆனால், அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த இளம்பெண், வெளியே செல்ல முயன்றிருக்கிறார். அப்போது சசிகுமார், அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றதால், அவரை தள்ளிவிட்டு, வீட்டிற்கு வெளியே ஓடியிருக்கிறார்.
மேலும், கொளத்துார் - ரெட்டேரி சந்திப்பில், ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம், நடந்த சம்பவத்தை பதற்றத்துடன் கூறியிருக்கிறார். புழல் போலீஸ் எல்லைக்கு உட்பட்டது என்பதால், புழல் போலீசாருடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.
தப்பினார்
பின், போலீசார் அவரை அழைத்துக்கொண்டு, ஆட்டோ டிரைவர் சசிகுமாரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, ஆட்டோவுடன் சசிகுமார் தப்பியது தெரிந்தது. ஆனாலும், போலீசார் அந்த பெண்ணிடம் புகார் பெற முயன்றனர்.
அந்த பெண், நான் வேலைவாய்ப்பிற்காக வந்த நிலையில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. 'புகார் ஏதும் வேண்டாம்; நான் ஊருக்கே சென்று விடுகிறேன்' எனக்கூறி சென்று விட்டார்.
புழல் போலீசாரின் விசாரணையில், ஆட்டோ டிரைவர் சசிகுமார் தன் மனைவி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, இளம்பெண்ணை ஏமாற்றி கடத்தி வந்து, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

