/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நகரில் ரவுடி விரட்டி கொலை; மகன் சிக்காததால் தாயை வெட்டிய கொடூரம்
/
அண்ணா நகரில் ரவுடி விரட்டி கொலை; மகன் சிக்காததால் தாயை வெட்டிய கொடூரம்
அண்ணா நகரில் ரவுடி விரட்டி கொலை; மகன் சிக்காததால் தாயை வெட்டிய கொடூரம்
அண்ணா நகரில் ரவுடி விரட்டி கொலை; மகன் சிக்காததால் தாயை வெட்டிய கொடூரம்
UPDATED : பிப் 27, 2025 03:12 AM
ADDED : பிப் 27, 2025 01:12 AM

அண்ணா நகர்,கிழக்கு அண்ணா நகர், அன்னை சத்யா நகர், முதல் தெருவைச் சேர்ந்தவர் பழைய குற்றவாளி சின்ன ராபர்ட், 28. இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன. ராபர்ட் நேற்று மாலை, 7:15 மணியளவில், அன்னை சத்யா நகர், இரண்டாவது தெருவில் நடந்து சென்றார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், சின்ன ராபர்ட்டை ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
அங்கிருந்தோர், அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர், 8:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், உடலை மீட்டு விசாரித்ததில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளிவந்தது.
ராபர்ட்டை வெட்டியஅதே கும்பல், சில மணிநேரத்திற்கு முன், அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி குடியிருப்பில் உள்ள ரேவதி, 32 என்பவரை வீட்டிற்கு புகுந்து, தலையில் வெட்டி, கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
காயமடைந்த ரேவதி, தலையில் 10 தையல் போடப்பட்ட நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்தும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக ராபர்ட் கூட்டாளியான கோகுல் என்பவரை, அயனாவரத்தில் 2019ல், லோகு என்பவர் கொலை செய்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக, ராபர்ட், லோகு இடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதேபோல், ரேவதியின் 17 வயது மகன், சமீபத்தில் ஆட்டோ எரிந்த வழக்கில் கைதானார். லோகுவின் நடவடிக்கைகளை, சிறுவனை வைத்து போலீசார் கண்காணித்ததாகவும் கூறப்படுகிறது.
ராபர்ட்டை கொலை செய்ய திட்ட மிட்ட கும்பல், சிறுவனை தேடி அவரது வீட்டிற்கு சென்றபோது, அவன் இல்லாததால், அவரது தாயை வெட்டியிருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தலைமறைவாக உள்ள ரேவதியின் மகனையும், மர்ம கும்பலையும் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.