ADDED : செப் 03, 2024 12:26 AM
பெரம்பூர், பெரியார் நகர்- - தலைமைச் செயலகம் செல்லும் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணியாற்றுபவர் பாலாஜி, 51. இவர், நேற்று மாலை 5:30 மணியளவில், பெரியார் நகரில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்றார்.
பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா அருகே வந்தபோது, பேருந்தின் முன்னால் பைக்கில் சென்ற மூவர், பேருந்துக்கு வழிவிடாமல் சென்றுள்ளனர்.
இதனால், பேருந்து ஓட்டுனர் 'ஹாரன்' எழுப்பியபடி சென்றுள்ளார். ஆத்திரமடைந்த மூவரும், பேருந்தை வழிமறித்து பைக்கை நிறுத்தி, பேருந்து ஓட்டுனரை கல் மற்றும் கையால் தாக்கியுள்ளனர். இதில் ஓட்டுனருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் பேருந்தை ஓட்டுனர் அங்கேயே நிறுத்தினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஓட்டுனர் மற்றும் போக்குவரத்து ஊழியர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து சாலையில் நிறுத்தப்பட்ட பேருந்து அங்கிருந்து அகற்றப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து, செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.