/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாக்குதல்; ரூ.100 கோடி நிலத்தில் வேலி அமைத்த போது வெறித்தனம்
/
ஓ.எம்.ஆரில் வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாக்குதல்; ரூ.100 கோடி நிலத்தில் வேலி அமைத்த போது வெறித்தனம்
ஓ.எம்.ஆரில் வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாக்குதல்; ரூ.100 கோடி நிலத்தில் வேலி அமைத்த போது வெறித்தனம்
ஓ.எம்.ஆரில் வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாக்குதல்; ரூ.100 கோடி நிலத்தில் வேலி அமைத்த போது வெறித்தனம்
UPDATED : மே 20, 2024 07:05 AM
ADDED : மே 20, 2024 01:37 AM

சென்னை:சென்னை, ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையில், செம்மஞ்சேரி பகுதியில், 5.55 ஏக்கர் அரசு இடத்தில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு, வருவாய் துறை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டது. அப்போது, ஆக்கிரமிப்பாளர்கள் 50 பேர் கும்பலாக சென்று, வேலியை அடித்து நொறுக்கியதுடன், அதிகாரிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம், ஓ.எம்.ஆரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டம், ஓ.எம்.ஆர்., சோழிங்கநல்லுார் தாலுகா, செம்மஞ்சேரி கிராமம் சர்வே எண்: 394, 395ல், 10 ஏக்கர் இடம் உள்ளது. இதில், 2000ம் ஆண்டு, தரமணி, பெருங்குடி, கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த, 300 பேருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டன.
மீதம், 6.50 ஏக்கர் இடம் உள்ளது. இதில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்ததால், சுற்றியும் வேலி அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, 5.55 ஏக்கர் இடத்தில் வேலி அமைக்கும் பணி கடந்த வாரம் துவங்கியது.
அப்போது சிலர், தங்களுக்கும் அரசு சார்பில் இங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினர். அவர்கள் கூறிய விபரங்கள் வருவாய் துறை ஆவணங்களில் இல்லை.
எனினும், ஏற்கனவே அங்கு வீடு கட்டி வசிப்போருக்கு எந்த இடையூறு ஏற்படுத்தாமல், மற்ற இடங்களில் வருவாய் துறை அதிகாரிகள் பாதுகாப்பு வேலி அமைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், 50 பேர் கும்பல் நேற்று முன்தினம், இரும்பு பாதுகாப்பு வேலியை அகற்றி, அத்துமீறி இடத்திற்குள் புகுந்தனர்.
அங்கு, வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வி.ஏ.ஓ., பாலசுப்ரமணியனிடம் வாக்குவாதம் செய்தனர். 'அரசுக்கு சொந்தமான இடத்தில் தான் வேலி போடுகிறோம்' என அவர் கூறியும், அந்த கும்பல் கேட்காமல், அவர் மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும், அவரது மொபைல் போனையும் பறித்தது.
தாக்குதல் சம்பவத்தை தடுக்க முயன்ற, அங்கிருந்த வருவாய் துறை அதிகாரிகளையும் அந்த கும்பல் அடித்து கீழே தள்ளி, ரவுடியிசத்தில் ஈடுபட்டது. இது தகவலறிந்து, செம்மஞ்சேரி பகுதி மக்கள் வரவும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
இச்சம்பவம் குறித்து, வி.ஏ.ஓ., பாலசுப்ரமணியன், செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்தார். தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
அரசு இடத்தை பாதுகாத்த வி.ஏ.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம், ஓ.எம்.ஆரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து எங்களை பாதுகாக்க வேண்டும் என, வருவாய் துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
செம்மஞ்சேரி மக்கள் கூறியதாவது:
அரசுக்கு சொந்தமான இடத்தை, 5 முதல் 10 சென்ட் என வீட்டு மனைகளாக கூறுபோட்டு, சில கும்பல் விற்பனை செய்துள்ளது. இதன் மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.
இந்த இடத்தின் அருகில், 105 ஏக்கர் பரப்பில் சர்வதேச தரத்தில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது. இதையறிந்து தான், இந்த பகுதியில் வளர்ச்சியை கருத்தில் வைத்து, அக்கும்பல் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த இடத்தை ஒட்டி, செங்கல்பட்டு மாவட்டம், தாழம்பூர் கிராமம் உள்ளது. அங்குள்ள சர்வே எண்ணை வைத்து, இங்குள்ள இடத்தையும் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
அபார வளர்ச்சி அடைந்துள்ள சோழிங்கநல்லுார் தொகுதியில், பெரும்பாலான அரசு துறைகள், வாடகை கட்டடத்தில் உள்ளன. இங்கு, ஒருங்கிணைந்த அரசு வளாகம் கட்டலாம். ஐ.டி., நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதியானதால் அரசு விடுதி கட்டி வருவாய் ஈட்ட முடியும். தவிர, அரசு ஊழியர்கள் குடியிருப்புகளும் கட்டலாம்.
எனவே, அரசு இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாக்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
20 பேர் மீது புகார்
வேலி அமைக்கும்போதே சிலர், அரசு எங்களுக்கும் இடம் ஒதுக்கியதாக கூறினர்; அவர்களிடம் ஆவணங்கள் இல்லை. அவர்கள் கூறியதை வைத்து, வருவாய் துறை ஆவணங்களையும் ஆய்வு செய்தோம்; எந்த தகவலும் இல்லை.
வீடு கட்டிய, 10க்கும் குறைவான நபர்களுக்கு இடையூறு செய்யாமல் வேலி அமைத்தோம். அவர்களுக்கு இடம் வழங்குவது குறித்து அரசு முடிவு செய்யும்.
காலி இடத்தை கூறு போட்டு விற்ற நபர்கள் தான், கும்பலாக வந்து தாக்குதல் நடத்தினர். அவர்களில் தாக்குதல் நடத்திய, 20 பேர் மீது போலீசில் புகார் அளித்துள்ளோம்.
-அதிகாரிகள்

