/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கைது
ADDED : ஜூலை 03, 2024 12:27 AM
பெரம்பூர், பீகாரைச் சேர்ந்தவர் அர்ஜுன், 33. சூலுார் பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் சொந்த ஊருக்கு சென்றவர், வேலைக்கு புதிதாக, 11 பேரை அழைத்துக் கொண்டு, கடந்த 30ம் தேதி இரவு 8:00 மணியளவில், பெரம்பூர் ரயில் நிலையம் வந்தார்.
அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல மூன்று ஆட்டோவில், 12 பேரும் ஏறிக் கொண்டு, ஓட்டேரி, செங்கை சிவம் மேம்பாலம் வழியாக சென்றபோது, ஆட்டோவை நிறுத்திய ஓட்டுனர்கள், வடமாநில வாலிபர்களை மிரட்டி பணம் கேட்டுள்ளனர்.
அப்போது, அவ்வழியே ரோந்து வந்த போலீசாரை பார்த்ததும், இரண்டு ஓட்டுனர்கள் ஆட்டோவை எடுத்துக் கொண்டு, வடமாநில வாலிபர்களிடம் பறித்த 7,000 ரூபாயோடு தப்பினர். மற்றொரு ஆட்டோ ஓட்டுனரான பெரம்பூரைச் சேர்ந்த மதன்குமார், 45, போலீசாரிடம் சிக்கினார்.
அர்ஜுன் அளித்த புகாரின்படி, மதன்குமாரை கைது செய்த ஓட்டேரி போலீசார், தப்பியோடிய திரு.வி.க.நகரைச் சேர்ந்த கார்த்திக், 31, மற்றும் ஓட்டேரியைச் சேர்ந்த துரை, 29, ஆகியோரை தேடி வந்தனர்.
நேற்று முன்தினம் இருவரையும் கைது செய்த போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.