/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் பட்டாபிராமில் அவதி
/
உணவு கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் பட்டாபிராமில் அவதி
உணவு கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் பட்டாபிராமில் அவதி
உணவு கிடங்கில் இருந்து வெளியேறும் வண்டுகளால் பட்டாபிராமில் அவதி
ADDED : ஜூன் 03, 2024 02:13 AM

ஆவடி:ஆவடி அடுத்த பட்டாபிராம், இந்து கல்லுாரியில், மத்திய அரசுக்குச் சொந்தமான, 'எப்.சி.ஐ.,' எனப்படும் ஆசியாவின் பெரிய உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது.
இதில், 83.7 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சம் டன் சேமிப்பு திறனுடன், 69 பிரமாண்ட கிடங்குகள் உள்ளன. அதில் அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
இங்கிருந்து, சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இங்கு சேமிக்கப்படும் உணவுப் பொருட்களில் இருந்து, வண்டுகள் உற்பத்தியாகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அங்கிருந்து வெளியேறும் வண்டுகளால், சென்னை -- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஐ.ஏ.எப்., சாலை, பட்டாபிராம் பாரதியார் நகர், திருவள்ளுவர் நகர், சத்திரம், கக்கன்ஜி நகர், தீனதயாளன் நகர், அண்ணா நகர், ராஜிவ் காந்தி நகர் உள்ளிட்ட 2 கி.மீ.,சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 8,000த்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, கிடங்கு அருகே உள்ள பாரதியார் நகர் பகுதிவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
நாள்தோறும் மாலை 4:00 மணி முதல் இரவு முழுதும் படையெடுக்கும் வண்டுகளால், அனைவரும் இரவில் துாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இவ்வாறு படையெடுக்கும் வண்டுகள் அரிசி, பருப்பு, குடிநீர் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் விழுகின்றன.
இதனால் குழந்தைகள் முதல் முதியோர் வரை கண் எரிச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோர், கண்களில் வண்டுகள் விழுந்து, கண்ணெரிச்சல் ஏற்பட்டு, வாகனங்கள் ஓட்ட முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டு ஜூன் முதல் செப்., வரை, வண்டுகள் இனப்பெருக்க காலம் என்பதால், வண்டுகள் தாக்கம் ஆண்டு இறுதி வரை நீடிக்கிறது.
ஆண்டுதோறும் உணவுக்கிடங்கில், வண்டுகள் இனப்பெருக்கத்தின் போது, ஊழியர்கள் சரியாக மருந்து அடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இருப்பினும், ஆண்டுதோறும் உணவுக் கிடங்குகளில் இருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
தற்போது கோடைக்கால வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் உஷ்ணத்தால் அவதியடைகின்றனர்.
இத்துடன், வண்டுகள் பிரச்னையால், மாலை 6:00 மணிக்கு மேல் ஜன்னல்களை திறந்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் ஒன்று சேர்ந்து ஆலோசனை நடத்தி, தகுந்த தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையில், நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவின்படி, ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மற்றும் இந்திய உணவு கழக அதிகாரிகள், அங்குள்ள வீடுகளில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.