/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை
/
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை
ADDED : ஜூலை 06, 2024 06:38 AM

சென்னை : சென்னையில், நேற்று இரவு வீட்டருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஆறு பேர் கும்பலால், கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
சென்னை பெரம்பூர், வேணுகோபாலசுவாமி தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங், 52; பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர். நேற்று இரவு, 7:00 மணியளவில், வீட்டுக்கு அருகே நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆறு பேர், ஆம்ஸ்ட்ராங் மற்றும் அவரது நண்பர்களை சுற்றி வளைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில், ஆம்ஸ்ட்ராங் கழுத்து, முதுகு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர். இதனால், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார்.
தடுக்க முயன்ற அவரது நண்பர்களையும் அரிவாளால் வெட்டி விட்டு, அந்த கும்பல் மின்னல் வேகத்தில் தப்பியது. சத்தம் கேட்டு ஓடி வந்த ஆம்ஸ்ட்ராங் உறவினர்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்தவர்களை மீட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்; அங்கு ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.
அவரது நண்பர்கள் வீரமணி, 65 மற்றும் பாலாஜி, 53 ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீரமணிக்கு தலையில், 17 தையல்களும், முதுகில் ஒன்பது தையலும் போடப்பட்டுள்ளது. பாலாஜிக்கு காலில் வெட்டு விழுந்துள்ளது. கொலையாளிகளை, சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ராக் கார்க் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கொலை நடந்த இடத்தில், இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கத்தி கண்டெடுக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் சென்னையை விட்டு தப்பிக்காமல் இருக்க, மாநகர் முழுதும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
ஆம்ஸ்ட்ராங்கிற்கு பொற்கொடி என்ற மனைவி உள்ளார். 2000ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 2006ல் சுயேச்சையாக போட்டியிட்டு, சென்னை மாநகராட்சி கவுன்சிலராக வெற்றி பெற்றார். 2007ல், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்றார்.
கடந்த 2011ல், சட்டசபை தேர்தலில், கொளத்துார் தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக களமிறங்கிய ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டார். அவர் மீது ஏற்கனவே, 13 வழக்குகள் இருந்தன. அனைத்திலும் விடுதலையான போதிலும், அவரை சுற்றி எப்போதும் நண்பர்கள் இருப்பர்; உரிமம் பெற்ற துப்பாக்கியும் வைத்திருந்தார்.
சம்பவ இடத்தில் இருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆராய்ந்ததில், கொலையாளிகள் ஆறு பேரும், ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் போல சீருடை அணிந்திருந்தது தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதும், பெரம்பூரில் உள்ள வீட்டையும், அதன் அருகில் உள்ள அலுவலகத்தையும் ஆம்ஸ்ட்ராங், கட்சி பணிகளுக்கு பயன்படுத்தி வந்துள்ளார்.
தேசிய கட்சியின் மாநில தலைவர் கொலை செய்யப்பட்டு இருப்பதால், சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
***